புலிகளின் பாதையிலேயே பயணிப்போம்; தமிழக மாணவர்கள்

25.3.13

மத்திய அரசு எங்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காவிட்டால் "புலிகளின் பாதையிலேயே நாங்களும் பயணிப்போம்'' என்று தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு நாள்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழக மாணவர்களின் போராட்டம் இன்னமும் ஓயாமல் தொடர்கின்றது. மாணவர்களின் இந்தப் போராட்டத்துக்குப் பொதுமக்களின் ஆதரவும் பல்கிப் பெருகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கையில் தனித் தமிழீழம் அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து மாணர்கள் தொடர்ந்து 12 ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். விருத்தாச்சலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், மஹிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியையும் பாடையில் வைத்து வீதிகள் வழியாக எடுத்து வந்து பாலக்கரையில் வைத்து அதனைக் கொளுத்தினர். அறந்தாங்கியில் அண்ணாசிலை முன்பாக மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். விருதுநகரில் மாணவர்கள் கறுப்புத் துணியால் வாயைக் கட்டி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். கரூரில் பொறியியல் மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரததத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைவிட நாம் தமிழர் கட்சியினரால் சிதம்பரத்திலும், திருவெண்ணாமலையிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

0 கருத்துக்கள் :