புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பஸ் நிலையம் அருகே, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளியாக அறிவித்து, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 22.03.2013 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் நிலையத்தின் அருகே நடுரோட்டில் ராஜபக்சேவின் உருவ பொம்மையை போட்டு, அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தகப்பட்டியை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் ஆனந்த் (வயது 23) எரிந்து கொண்டிருந்த ராஜபக்சேவின் உருவ பொம்மையை காலால் உதைத்தார். அப்போது திடீரென ஆனந்தின் உடையில் தீப்பற்றியது. சட்டையில் பற்றிய தீ உடலிலும் வேகமாக பரவியது. இதனால் வலி தாங்க முடியாத நிலையிலும், ராஜபக்சே ஒழிக என்றும், மத்திய அரசை கண்டித்தும் சத்தம் போட்டவாறு அப்பகுதி சாலையில் ஆனந்த் ஓடினார். அந்த பகுதியில் இருந்தவர்கள் இதைப்பார்த்து ஆனந்தின் உடல் மீது மண்ணை அள்ளிப்போட்டும், பழைய சாக்கை கொண்டு அடித்தும் தீயை அணைக்க முயன்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர் ஆனந்தின் உடலில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் ஆனந்திற்கு முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி செய்யப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆனந்த் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
|
0 கருத்துக்கள் :
கருத்துரையிடுக