சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்! காங்கிரஸ் கூட்டத்தில் சோனியா

20.3.13

2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம். இவ்வாறு காங்.கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி தெரிவித்தார். டெல்லியில் நேற்று செவ்வாயக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே சோனியா காந்தி மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பிரச்சினை பற்றி அங்கு அவர் மேலும் கூறியதாவது:- இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வருகிற துயரங்கள், நமது இதயத்தை தொடுகின்றன. இலங்கை தமிழர்கள், சிங்கள மக்களுக்கு நிகராக அனைத்து உரிமைகளையும், சம அளவிலான சட்ட பாதுகாப்பையும் பெற வேண்டும் என்பதற்கு நாம் அளித்து வந்த ஆதரவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து எந்த தடுமாற்றமும் இல்லை. அவர்களுக்கு சட்டபூர்வமான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கதையாகி வரும் விதம் நம்மை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது. அப்பாவி மக்கள் மீதும், குழந்தைகள் மீதும் சொல்ல இயலாதபடிக்கு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக 2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம். அதேவேளை, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வதும், சுடுவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. தினந்தோறும் நடந்து வருகிற இந்த வன்முறைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பது தவிர்க்க இயலாதது. இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துக்கள் :