ஜெனீவாவில் கூறுவது பொய்; மக்களை ஏமாற்றி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

12.3.13

அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்கு வாருங்கள் என்று கூறி அழைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் ஜெனீவாக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சி டிப்போ சந்தியில் நடைபெற்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் கீதாஞ்சலியின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றுள்ளது. இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரின் மேற்பார்வையின் கீழ் பணியாற்றி வரும் வடமாகாணத்தை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களே, அடையாள அட்டை வழங்கப்படும் என கூறி அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். நிகழ்வுக்கு வரும்போது தொண்டர் ஆசிரியர்களுக்கென வழங்கப்பட்டிருக்கும் பிரத்தியேக நிறத்திலான உடையினை இன்றைய தினம் அணிய வேண்டாம் என்றும் வேறு நிறத்திலான உடையினை அணிந்து வருமாறு அவர்களுக்கு கட்டளையிடப்பட்டது. அத்துடன் இன்று வருகை தராத தொண்டர் ஆசிரியர்களுக்கு 12 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனவும் அவரால் எச்சரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இராணுவத்தினரின் உதவியுடன் கிராமப் பகுதி மக்கள் கட்டாயமாக அழைத்து வரப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதை ஜெனீவாவிற்கு காட்டவே அரசாங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. வவுனியாவில் சுதந்திரக்கட்சியின் இணைப்பாளர் பிரேமரட்ண சுமதிபாலவின் ஏற்பாட்டில் இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதேவேளை, இறுதிக் கட்டயுத்தத்தில் காணாமல் போன தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கடந்த 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்திய போராட்டம் ஜெனீவா வரை பேசப்பட்டு மனிதஉரிமை மீறல் நடைபெற்றமை என்பது மேலும் வலுப்பெற்றுள்ளது. அதனை மறுக்கும் வகையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துக்கள் :