போர்க்குற்ற ஆதாரங்கள்: கோத்தாவுக்கு மகிந்த எச்சரிக்கை

1.3.13

சிறிலங்கா இராணுவத்தின் போர்க்குற்ற ஒளிப்படங்கள் வெளிவருவதன் பின்னணியில், ராஜபக்சக்களுக்கு எதிராகச் செயற்படும் ஐதேக ஆதரவு இராணுவ அதிகாரிகளே இருப்பதாக, சிறிலங்கா அதிபர் விசனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் அவர் எச்சரித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் மீது நம்பிக்கை வைத்து செயற்படும் போது கவனமாக இருக்கும் படியும், அவர்களில் பெரும்பாலானோர் பலமான ஐதேக குடும்பங்களில் இருந்து 1977ம் ஆண்டுக்குப் பின்னர், படைகளில் இணைந்து கொண்டவர்கள் என்றும் சிறிலங்கா அதிபர் எச்சரித்துள்ளார். இதற்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா மற்றும் அவரது குடும்பப் பின்னணியையும் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார். தற்போது ராஜபக்ச ஆதரவாளராக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுபவர். இவரை சிறிலங்கா இராணுவத்துக்கு பரிந்துரை செய்தவர் ஐதேக ஆட்சியில் கலாசார அமைச்சராக இருந்தவரும், மாத்தளையில் ஐதேகவின் பலம்வாய்ந்த புள்ளியுமான பி.பி.கவிரத்ன ஆவார். சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையில் தற்போது உயர் பதவிகளில் உள்ள அனைவருமே ஐதேகவின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் பரிந்துரைகளின் பேரில், சேர்க்கப்பட்டவர்கள் என்ற உண்மையை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும்படியும் கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியுள்ளார். வெளிநாட்டு ஊடகங்களால் சுமத்தப்படும் போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தும் ஒளிப்படங்கள் என்பன, ராஜபக்சக்களுக்கு எதிரான ஐதேகவின் சதி என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். ஆயுதப்படைகளில் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர்கள் ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் வரை தான் ஆதரவாக இருப்பார்கள். ஆட்சியில் இருந்து வெளியேறியதும், மரியாதை வணக்கம் செலுத்திய அவர்கள், போர்க்குற்ற ஆதாரங்களை கொடுத்து விடுவார்கள். எனவே எந்தவொரு இராணுவ அல்லது காவல்துறை அதிகாரியையும் முழுமையாக நம்பக்கூடாது என்று கோத்தாபய ராஜபக்சவுக்கு சிறிலங்கா அதிபர் ஆலோசனை கூறியுள்ளதாகவும், ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :