உலக பெண்கள் தினம் 2013

8.3.13

யுத்தமோ சாதாரண வாழ்வியலோ இவற்றினுள் ஏற்படும் தாக்கங்களில் வெகுவாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் விபரம் தெரியாது தாக்கங்களுக்குட்படுத்தப்படுவது இயல்பெனலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் குழந்தை நிலையிலிருந்து முதுமை நிலைவரை தாமாகவே தேடிக்கொண்டுவரும் தாக்கங்கள் ஏராளம்.

உலகெங்கிலும் சமநிலை பேணப்பட்டாலும் கூட இனம் தெரியாத ஆண் மேலாதிக்கத் தன்மை பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருவது கண்கூடு. உலக ஒழுங்கில் பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டுவரும் வன்முறை பல காரணங்களுக்காக அமையலாம். உலக ஒழுங்கியல்களுக்கு மாறாக ஈழத்தில் தமிழ்ப்பெண்கள்மீது திணிக்கப்படும் வன்முறையின் மேலாதிக்கமும் உலகில் எங்குமே காண முடியாததாகும்.

பாலியலின் போதைப்பொருளாக பெண்கள் பாவிக்கப்பட்டாலும், ஒரு இனத்தின்மேல் கொண்ட காழ்ப்பின் காரணமாக வன்புணர்ச்சி செய்யப்படுவதும் பின்னர் அந்த பெண்களை அழிப்பதும் மிகப்பெரிய கொடூரம். சிறுமிகளைப் பாலியல் வதைக்குட்படுத்துவதும் பின்னர் கருவழிப்புச் செய்வதும் அதோடு கூட கருக்கொள்ளாமல் மலட்டுத்தன்மையாக்குவதும் கொடுமையிலும் கொடுமை. 

ஒரு இனத்தின் வாரிசுகளை ஒரு அடையாளமாக இந்த உலகிற்கு ஈன்று கொடுப்பது பெண்கள் தான். அந்த பெண்களை ஒட்டு மொத்தமாக பெண்மையற்ற மலடுகளாக குறிப்பாக முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னராக தமிழ்ப்பெண்கள் மேல் சிங்களம் இன்றுவரை செய்துவரும் கொடுமைகள் இந்த உலகங்களுக்கு முன்னால் சாட்சிகளுடன் விரிந்து கிடக்கின்றது. 

வெறுமனே வருடங்கள் தோறும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் மகளிர் தினங்கள் வெறும் ஒப்பனைக்காக தான் இருக்கின்றது. தமிழினத்தின் அழிப்பை பெண்களுக்கூடாகச் சிங்களம் செய்துவரும் கொடூரம் எப்பொழுது நிரந்தரமாக நிறுத்தப்படுமோ அன்றிலிருந்துதான் பெண்கள் தினம் அனுஷ்டிக்கப்படுவதில் ஒரு அர்த்தமிருக்கும்.
 

'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்'
 
தமிழர் நடுவம் சுவிஸ்


 

0 கருத்துக்கள் :