இத்தாலி பணிந்தது: 2 கடற்படை வீரர்கள் இன்று இந்தியா திரும்புகிறார்கள்

22.3.13


அரபிக்கடலில் மீன்பிடித்த 2 கேரள மீனவர்களை இத்தாலி கப்பலில் பாதுகாப்பாக இருந்த கடற்படை வீரர்கள் கடற்கொள்ளையர்கள் என சுட்டுக் கொன்றனர். இதையடுத்து இத்தாலி கடற்படை வீரர்கள் மஸ்சிமில்லியனோ லத்தூர், சால்வதோர் கிரோனே ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கேரள போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே 2 கடற்படை வீரர்களும் இத்தாலி தேர்தலில் வாக்களிக்க சொந்த நாட்டுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். டெல்லியில் உள்ள இத்தாலி தூதர் உத்தரவாதம் அளித்ததன் பேரில் 2 வீரர்களும் இத்தாலி செல்ல கோர்ட்டு அனுமதி அளித்தது. ஆனால் பரோல் முடிந்த பின்னரும் அவர்களை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு மறுத்து விட்டது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. தூதரை அழைத்தும் நேரில் கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் இத்தாலி அரசு பிடிவாதம் பிடித்தது. சர்வதேச சட்டப்படிதான் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியது. இதற்கிடையே வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்தபோது இத்தாலி வீரர்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படாததால் இத்தாலி தூதரை இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. தேவைப்பட்டால் தூதரை கைது செய்யும் உத்தரவும் பிறப்பிக்கப்படும் வாய்ப்பு இருந்தது. இதையடுத்து இத்தாலி அரசு பணிந்தது. தூதரக மட்டத்தில் இந்தியாவிடம் பேச்சு நடத்தியது. அப்போது இத்தாலி வீரர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் தூக்கு தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்றும் இந்தியாவிடம் உத்தரவாதம் கேட்டது. இந்த உத்தரவாதத்தை எழுத்து மூலம் தரவேண்டும் என்றும் இத்தாலி கூறியது. இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து 2 வீரர்களையும் இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி அரசு சம்மதம் தெரிவித்தது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீனவர்கள் கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது 2 வீர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து இத்தாலி தூதருக்கு எதிரான உத்தரவை கோர்ட்டு திரும்ப பெறும். 2 கடற்படை வீரர்கள் மீதும் தொடர்ந்து மீனவர்கள் கொலை வழக்கு விசாரணை நடைபெறும். 2 வீரர்களை ஒப்படைக்க இத்தாலி அரசு முன் வந்ததற்கு மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என். சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எடுத்த முயற்சியின் காரணமாக இத்தாலி இந்த முடிவுக்கு வந்திருப்பதாக கூறினார்

0 கருத்துக்கள் :