12 வயதில் காதலித்த போப் பிரான்சிஸ் : அர்ஜென்டினா பெண் பரபரப்பு பேட்டி

16.3.13

பியூனஸ் ஏர்ஸ்: புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, 12 வயதில் காதலித்துள்ளார். இதை சம்பந்தப்பட்ட அந்த பெண் நினைவுகூர்ந்து பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப். கடந்த மாதம் 28ம் தேதி போப் பெனடிக்ட் மூப்பு காரணமாக பதவி விலகினார். புதிய போப்பாக அர்ஜென்டினாவை சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐரோப்பாவை சேர்ந்தவர்களே போப்பாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஜார்ஜ் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜார்ஜ் மரியோவின் இளமை கால வாழ்க்கை, அவருடைய எளிய வாழ்க்கை முறை, மதத்தின் மீதான பற்று, சேவை போன்றவை குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இப்போது, 12 வயது சிறுவனாக இருந்த போது ஜார்ஜ் மரியோ காதலித்த தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் புறநகர் பகுதி புளோர்ஸ். இந்நகரில்தான் ஜார்ஜ் மரியோ வசித்துள்ளார். அப்போது பக்கத்துக்கு வீட்டில் வசித்தவர் அமாலியா டமோன்டி. இப்போது இவருக்கு வயது 76. இப்போது பியூனஸ் ஏர்ஸ் நகரில் வசிக்கிறார். இவர் தன்னுடைய இளமைகால நினைவுகளை இப்போது பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அமாலியா பேட்டியில் கூறியிருப்பதாவது: நானும் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜார்ஜ் மரியோவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்தோம். அப்போது எங்களுக்கு 12 வயது இருக்கும். திடீரென ஒரு நாள் எனக்கு ஒரு கடிதம் கொடுத்தார். அதில், Ôஉன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ சரி என்றால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லா விட்டால் நான் பாதிரியாராக ஆகி சேவையில் ஈடுபடுவேன் என்று எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் வெள்ளை மாளிகை படத்தையும், மாளிகையின் கூரையை சிவப்பு நிறத்திலும் வரைந்திருந்தார். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் இந்த வீட்டைதான் வாங்குவேன். இதில் நாம் வாழலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இது காதலா என்று சொல்ல தெரியாது. ஆனால், அந்த 12 வயதில் கள்ளம் கபடமில்லாத தூய அன்பு என்பதை என்னால் உணர முடிகிறது. ஜார்ஜ் மரியோவின் கடிதத்துக்கு பதில் கடிதம் எழுத நினைத்தேன். ஆனால், கடிதம் பற்றி எனது பெற்றோருக்கு தெரிந்து விட்டது. என்னை அடித்தனர். பின்னர் வேறு இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர். அதன்பின் அவரை சந்திக்க முடியாமல் போனது. அந்த காதலும் முடிவுக்கு வந்து விட்டது. இப்போது ஜார்ஜ் மரியோ புதிய போப்பாக வருவதை நான் முதலில் விரும்பவில்லை. ஏனெனில், போப்பாகி விட்டால் மிக தூரத்துக்கு உயர்ந்த இடத்துக்கு சென்று விடுவார். அந்த பொறுப்பு மிகப் பெரியது. அதனால் நான் விரும்பவில்லை. ஆனால், அவர் போப்பானது இப்போது பெருமையாக இருக்கிறது. ஏனெனில் ஐரோப்பாவை சேராத ஒருவர் அர்ஜென்டினாவை சேர்ந்த ஒருவர், என்னுடைய நண்பர், சகோதரர் ஒருவர் போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு அமாலியா கூறியுள்ளார். கார்டினலாக இருந்த ஜார்ஜ் மரியோ கடந்த 2010ம் ஆண்டு ஒரு பேட்டியில், 'எனக்கு சிறுவயதில் கேர்ள் பிரண்ட் இருந்தார்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :