இலங்கையின் மீது பொருளாதாரத்தடை; விதிக்கக் கோருகிறார் ஜெயலலிதா

9.2.13

கடந்த முறை பிரேரணையை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணை ஒருபுறமிருக்க, இந்தியாவும் அவ்வாறானதொரு பிரேரணையைக் கொண்டுவந்து ஏனைய நாடுகளின் ஆதரவுடன் அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்திய மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இனப்படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் "என்று பிரகடனப்படுத்துமாறு ஐ.நாவை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோதே முதல்வர் ஜெயலலிதா மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இதுதொடர்பில் அவர் இலங்கை பற்றி மேலும் கூறியதாவது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து இங்கே சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்கள், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். சிங்களவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளுடன் அவர்கள் வாழவேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்நிலை ஏற்படும்வரை இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும். இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க் குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகள் எனப் பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக, ஏற்கனவே இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்தத் தீர்மானத்தின் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இவ்வேளையில் நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். கடந்த வருடம் ஜெனிவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா வலுவான ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக இந்திய அரசு வாக்களிக்க வேண்டும் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்கை தொடர்ந்து வலியுறுத்தினேன். வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமரே முதலில், அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசு, எனது தொடர் வலியுறுத்தல் காரணமாக பின்னர் அந்தப் பிரேரணையை ஆதரித்து வாக்களித்தது. இருப்பினும், அந்தப் பிரேரணையை வலுவிழக்கச் செய்தவர் பாரதப் பிரதமராவார். பாரதப் பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடித்தில் இது விடயத்தை விளக்கியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நீர்த்துப்போன பிரேரணையை அடிப்படையாகக் கொண்டே இலங்கை அரசு இன்னமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இம்முறைக் கூட்டத்தொடரில் மீண்டும் ஒரு பிரேரணையை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இவ்வாறானதொரு பிரேரணையை அமெரிக்க கொண்டுவருவது ஒரு புறம் இருந்தாலும், தமிழர்கள் நலன் கருதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இந்திய அரசு ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அதை மற்ற நாடுகளுடன் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் மத்திய அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதேபோன்று, இலங்கைக் கடற்படையினரின் கொடூரச் செயல்களாலும், கடும் தாக்குதல்களாலும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அப்பாவி தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதில், மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறும், அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுமாறும் இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா.

0 கருத்துக்கள் :