தண்டனையில் இருந்து மகிந்த ராஜபக்ச தப்பிவிட முடியாது: கலைஞர்

13.2.13


உலக நாடுகளின் கண்டனத்திலிருந்தும், தண்டனையில் இருந்தும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தப்பிவிட முடியாது என்பதே உலகமெங்கும் வாழும் தமிழர்களின் நம்பிக்கை என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் தமிழர்கள் வாழும் 89 கிராமங்களின் தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றியதை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டியுள்ளேன். இலங்கையில் 367 இந்துக் கோவில்களை இடித்துள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் மட்டும் 208 கோவில்கள் இதுவரை தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

தமிழர்கள் வாழும் பகுதியில் இந்துக் கோவில்கள் இருந்தன என்பதற்கான அடையாளங்களே தற்போது எதுவும் இல்லை என்று செய்தி வந்துள்ளது. அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரவிருக்கிற தீர்மானத்தின் மூலமாகவாவது விடிவு காலம் ஏற்படுமா என்பதுதான் நம்முடைய இன்றைய கவலை.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொதுநலவாய மாநாட்டை வேறொரு நாட்டில் நடத்த வேண்டுமென்று நியூயார்க்கில் உள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டினை கனடா போன்ற நாடுகள் புறக்கணிக்க போவதாக எச்சரிக்கையளிப்பது, மகிந்த ராஜபக்ச அரசின் கொடுமைகளை உலக நாடுகள் புரிந்து கொள்ள தொடங்கி இருப்பதற்கான அடையாளம்.
ராஜபக்சவின் அரசு புரிந்திருக்கும் வரலாறு காணாத போர்க்குற்றங்களை புரிந்துகொண்டு இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்து உலக நாடுகளும் உலக அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டு வருவதை புரிந்துகொண்ட ராஜபக்ச, அவற்றை எப்படியாவது திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மீண்டும் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் என்று பாதுகாப்பபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கூறியிருப்பது, இதை திசை திருப்பும் நோக்கத்துடன்தான்.
ஜெனீவா நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர திட்டமிட்டுள்ள தீர்மானத்தை மழுங்கச் செய்திடும் முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :