ராஜபக்சேவிற்கு கூண்டு! தமிழர்களுக்கு தனி ஈழம்! இதுவே தீர்வு! ராமதாஸ் பேச்சு!

26.2.13

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும். அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றி விசாரித்து தண்டிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 26.02.2013 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு காரணமாக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ஏற்ற வலியுறுத்தி இந்த தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டதை சேனல் 4 வெளியிட்டபோது பார்த்து இதயம் நொறுங்கியது. ஈரக்குலை நடுங்கியது. ஈவு இரக்கமின்றி கொடூரமாக அந்த 12 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் ஏற்ற இன்னும் ஆதாரங்கள் நிறைய உள்ளன. அதில் சில 2009 போரின்போது ஒன்றரை லட்சம் தமிழ் ஈழ மக்கள் ஒரே நாளில் அழிக்கப்பட்டபோது உலகமே அழுதது. போரின்போது தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டு போன்ற குண்டுகளை வரம்பு மீறி உபயோகப்படுத்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் அவரது மனைவி மற்றும் தளபதி ரமேஷ் ஆகியோர் வெள்ளைக் கொடி சிங்கள அரசிடம் சரண் அடைந்த போதும், அவர்களை கொடுமை செய்து ராஜபக்சேவின் உத்தரவின்படி கொடூரமாக கொலை செய்தனர். இப்படி நிறைய ஆதாரங்கள் உள்ளன. வரும் ஜெனீவா மாநாட்டில் பசுமை தாயகம் அமைப்பின் மூலம் ஐ.நா. சபை தலைவருக்கு மூன்று கோரிக்கைகளை வைத்து எழுத்து மூலம் மனுவாக கொடுத்துள்ளோம். அதனை ஐ.நா. சபையின் தலைவரே அந்த மாநாட்டில் பங்கேற்கப் போகும் 47 நாடுகளுக்கும் நேரடியாக கொடுத்துள்ளார். பல முனைகளில் தமிழ் ஈழ மக்களுக்காக போராடி வருகிறோம். ராஜபக்சேவிற்கு கூண்டு. தமிழ் ஈழ மக்களுக்கு ஈழம். இதுவே தமிழ் ஈழத்திற்கு தீர்வு என்றார்.

0 கருத்துக்கள் :