பிணங்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு தண்ணீர்குடித்தோம் : இறுதிப்போரில் உயிர்தப்பியவர்கள் பேட்டி

21.2.13


இலங்கையில் இறுதிக்கட்ட போரில் நடந்த கொடுமைகள் குறித்த சேனல்-4 புதிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'நோ பயர் சோன்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணபடம் 90 நிமிடம் ஓடுகிறது. இலங்கை இறுதிகட்ட போரின்போது 'நோ பயர் சோன்' என்று அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் சிங்கள ராணுவம் எந்த மாதிரி கொடுமையான தாக்குதல் நடத்தின என்பது பற்றிய முழு விபரங்களும், அதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. சேனல் 4 வெளியிட்ட புதிய ஆவணப்படத்தில் தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் காட்சிகள் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. ஆவண படத்தில் இலங்கை தமிழ்ப்பெண் வாணி விஜி, ’’இலங்கை இறுதிக்கட்ட போரின்போது நானும் ஏராளமான அப்பாவி தமிழர்களும் இடம்பெயர்ந்து உயிர் தப்பிக்க பாலத்தின் வழியாக கடந்து சென்றோம். அப்போது ஒரு மூதாட்டி இலங்கை அதிகாரிகளிடம் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியை பார்த்து சிரித்த அதிகாரி, 'பாலத்தின் அடியில் ஓடும் தண்ணீரை குடி' என்று ஏளனமாக கூறினார். பாலத்தின் அடியில் நான் பார்த்தபோது போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிணங்கள் மிதந்தன. வேறு வழியின்றி பிணங்களை ஒதுக்கித்தள்ளி விட்டு அந்த தண்ணீரை எடுத்து குடித்தோம்’’ என்று கூறியுள்ளார். இறுதிக்கட்ட போரில் ஐ.நா. ஊழியர் பீட்டர் மெக்கே உயிர் தப்பினார். அவர் 'சேனல் 4' பேட்டியில், ’’அது ஒரு மாலை நேரம். 4 மணி இருக்கும். கடுமையான வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நானும், ஏராளமான மக்களும் உயிர் தப்பித்தோம். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து தெற்கு பகுதியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாங்கள் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளுக்கிடையில் ஒழிந்து இருந்தோம். எங்கள் மீதும் எல்லா திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண் விழித்து பார்த்தபோது என் மீது ஒரு பெண்ணின் உடல் கிடந்தது. அவரது உடலை வெடிகுண்டு துகள்கள் கிழித்திருந்தன. அந்த பெண் உயிருக்கு போராடினார். காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மறுநாள் காலையில் அந்த இடம் பேரழிவு தளமாக காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் பிணங்கள். அது பாதுகாக்கப்பட்ட பகுதியாக ராணுவம் அறிவித்தது. அங்கு தஞ்சம் புகுந்த மக்களை ராணுவம் ஏன் குண்டு வீசி கொல்ல வேண்டும். பொதுமக்கள் சாவதை ராணுவம் பொருட்படுத்தவில்லை. திட்டமிட்டே அப்பாவிகளை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த இடத்தில் 5 பேர் இறந்து கிடந்தனர். அவர்களுடன் ஒரு சிறுவனும் பிணமாக கிடந்தான். அந்த சிறுவன்தான் பிரபாகரன் மகன் பாலசந்திரன். பாதுகாவலர்களுடன் பாலச்சந்திரன் இறந்து கிடந்தான். அவன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்து இருந்தன. அவன் 2 அடி நெருக்கத்தில் சுடப்பட்டு இருக்கிறான். இது கொலைதான். சிறிதளவும் அதில் சந்தேகம் இல்லை. இது ஒரு போர்க்குற்றம். இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :