இலங்கை அரசின் இனப்படுகொலை! இந்தியா இன்னும் மௌனம் காப்பது ஏன்?: தொல்.திருமாவளவன்

19.2.13

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெனியீட்டுள்ள அறிக்கையில்: முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டதை உலகம் அறியும். அந்தக் கொடூரம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அந்த இனப்படுகொலைக் குற்றவாளிகளான ராஜபக்சே கும்பல் அதிகாரத்தில் நீடித்துக்கொண்டிருக்கிறது. இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சேனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற பாலகன் இலங்கை ராணுவத்தால் கைக்கெட்டும் தூரத்திலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒரு சில நிமிடங்களிலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்ததை அறிந்திருந்தும் தொடர்ந்து ராஜபக்சே கும்பலுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. சிங்கள இனவெறி ராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது. போர்க்குற்றவாளிகளான ராஜபக்சேவுக்கும், கொத்தபாயாவுக்கும் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட ‘ராஜிய உறவு’ என்ற பெயரில் இந்திய அரசு தொடர்ந்து இலங்கை இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவளித்து வருவது தமிழ் மக்களைக் கேவலப்படுத்தும் செயலாகும். பாலச்சந்திரன் படுகொலையைப்போல இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளிவரப்போகின்றனவோ தெரியவில்லை. இவ்வளவுக்குப் பிறகும் இந்தியா வாய்மூடி மௌனம் காப்பது முறையல்ல. இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் ஒன்றை முன்மொழியவேண்டும். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்க சுயேச்சையான சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா அவையின் மேற்பார்வையில் நடத்துவதற்கு இந்திய அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது

0 கருத்துக்கள் :