சிறிலங்காமீது அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை

11.2.13

"சிறிலங்காமீது அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை" - ஆய்வாளர் அலன் கீனன்..சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என அண்மையில் சிறிலங்கா அதிபர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதிபர் தனது இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். சிறிலங்காவின் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டதற்கு இணங்க மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என முன்னர் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி அளித்த போதிலும் கூட, கடந்த திங்களன்று சிறிலங்காவில் இடம்பெற்ற இதன் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச "இனங்களின் அடிப்படையில் வெவ்வேறு நிர்வாகங்களை உருவாக்குவதானது நடைமுறையில் சாத்தியமற்றது" என குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா அதிபரின் இந்த அறிவிப்பானது, அதிபர் ராஜபக்சவினதும் நாட்டில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிபரின் சகோதரர்களதும் உண்மையான மன உணர்வை பிரதிபலித்துக் காட்டுவதாக அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பின் சிறிலங்காவுக்கான திட்ட இயக்குனரும் மூத்த ஆய்வாளருமான அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார். மகிந்த ராஜபக்சவின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர், தற்போது சிறிலங்கா அதிபர் குறிப்பிட்டது போன்று தமிழர்களுக்கு சுயாட்சி உரிமை கிடையாது என முன்னர் தெரிவித்ததாக அலன் கீனன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். "தமிழர் பிரதேசங்களுக்கு மேலும் அதிகாரங்களை விரிவுபடுத்துதல் அல்லது அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை விடுத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் உண்மையில் குறைக்கப்பட வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும் என முக்கிய பதவிகளை வகிக்கும் மகிந்த ராஜபக்சவின் மூன்று சகோதரர்களும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்" என அலன் கீனன் மேலும் விளக்கியுள்ளார். ஐக்கி நாடுகள் சபை, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஏனைய உலக நாடுகளுக்கு சிறிலங்கா அதிபர் உள்ளடங்கலாக ராஜபக்ச சகோதரர்கள் தாம் கடந்த காலங்களில் வழங்கிய தமிழ் மக்கள் தொடர்பான வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாகவும் அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள அமைதி நிலையை சீர்குலைப்பதற்கான நடவடிக்கைகளில் ராஜபக்ச அரசாங்கம் ஈடுபட்டுள்ளதுடன், நாட்டில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை இனங்களை ஓரங்கட்டி சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு துணைபோவதாகவும் கீனன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் நாட்டில் இனக் குழப்பங்கள் மட்டுமே அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். "சிறிலங்காவானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கருத்தியலை தற்போதைய அரசாங்கம் விதைத்துள்ளது. தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களின் பெருந்தன்மையின் விளைவாக சிறிலங்காவில் வாழ்கின்றார்களேயன்றி, இவர்கள் சிங்கள சமூகத்திற்கு சமமாக வாழக்கூடிய தகைமையைக் கொண்டிருக்கவில்லை என சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கூறிவருகிறது. சிறிலங்காவில் வாழும் ஏனைய மக்களைப் போலவே தமிpழர்களும் சம உரிமையைக் கொண்டுள்ள அதேவேளையில், தமிழர்கள் 'வந்தேறு குடிகள்' என்ற பொய்யான கருத்தை ராஜபக்ச சகோதரர்கள் பரப்பிவருகின்றனர்" எனவும் அனைத்துலக நெருக்கடிகள் அமைப்பைச் சேர்ந்த அலன் கீனன் சுட்டிக்காட்டியுள்ளனர். எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு தமிழ் மொழி உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். முஸ்லீம் கட்சிகள் உள்ளடங்கலான சில கட்சிகள் 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிட்டது போன்று மாகாணங்களுக்கான அதிகாரங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வங்கொண்டுள்ள போதிலும், சிறிலங்கா அதிபர் தான் ஏற்கனவே இது தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்படுகிறார் என கீனன் தெரிவித்துள்ளார். "சிறிலங்கா அதிபர் தான் விரும்புவதை அடைந்து கொள்ளும் விதமாகவே கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவின் அரசியல் இடம்பெற்று வருகிறது" என கீனன் சுட்டிக்காட்டியுள்ளார். "இதேவேளையில் 13வது திருத்தச் சட்டம் கூட போதியளவு அதிகாரங்களை வழங்கவில்லை. மாகாணங்களுக்கு மிகமட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே இச்சட்டத்தின் மூலம் வழங்கப்பட முடியும். இச்சட்டமானது தமிழ் மக்களின் அரசியல் அவாக்களையும் அவர்களது கோரிக்கைகளையும், விருப்பங்களையும், எதிர்பார்ப்புக்களையும் திருப்திப்படுத்தாது" எனவும் கீனன் மேலும் விளக்கியுள்ளார். ஓரங்கட்டுதல் மூலம் எழக்கூடிய பிரச்சினை மற்றும் சுயாட்சி அதிகாரம் என்பவற்றை உண்மையில் மகிந்த ராஜபக்ச உணர்ந்து கொண்டால் மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வானது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்பதை பெரும்பான்மை சிங்கள மக்களையாவது நம்பவைக்க முடியும் என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டதாக கீனன் மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார். "சிறிலங்கா அதிபர் ராஜபக்ச சிறுபான்மை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஆர்வங்கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்" என கீனன் தெரிவித்துள்ளார். "சிறிலங்கா வாழ் தமிழ் மக்கள் விடயத்தில் ராஜபக்ச மீது வெளித்தரப்பினர் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் சிறிலங்காவுக்கு மிக அண்மையிலுள்ள இந்தியாவோ அல்லது ஏனைய அனைத்துலக சமூகமோ இந்த விடயத்தில் சிறிலங்கா மீது போதியளவு அழுத்தத்தை வழங்கவில்லை. வெளித்தரப்பினர் அழுத்தம் கொடுக்கும் போதே சிறிலங்காவில் மாற்றம் ஏற்படுவது சாத்தியமாகும்" என கீனன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். "சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா உவகை அடையவில்லை எனினும் சிறிலங்காவில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெளித்தரப்பின் அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்தியா விருப்பங் கொண்டிருக்கவில்லை. இந்தியாவானது பூகோள ரீதியாக மட்டுமன்றி தென்னிந்தியாவில் வாழும் கணிசமானளவு தமிழ் மக்களின் நிலைப்பாட்டையும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் சிறிலங்கா விடயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பைக் கொண்டுள்ளது. இந்தியா சிறிலங்காவுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தால் அது மேலும் சீனாவின் ஆதரவை எதிர்பார்க்கும் என இந்தியா நம்புகிறது" எனவும் அலன் கீனன் தெரிவித்துள்ளார். "சிறிலங்கா விடயத்தில் இந்தியா சில நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தாலும் கூட, அனைத்துலக சமூகத்துடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கம் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதிகாரப் பகிர்வு, தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்படுதல் போன்ற விடயங்களில் மட்டும் அழுத்தம் கொடுக்காது மனித உரிமை, சட்ட ஆட்சி, அதிகாரப் பிரிவினை, ஜனநாய ஆட்சி போன்றவை சிறிலங்காவில் பலம்பெறுவதற்கான அழுத்தத்தை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து இந்தியா வழங்க வேண்டும்" என கீனன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆய்வுக்கட்டுரையின் வழிமூலம் : World Politics Review - By Catherine Cheney தமிழில் : நித்தியபாரதி

0 கருத்துக்கள் :