ஆவணப்படத்தை திரையிட இலங்கை எதிர்ப்பு: ராமதாஸ் கண்டனம்

26.2.13

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்பான ஆவணப்படத்தை ஐ.நா மனித உரிமை ஆணயத்தில் திரையிட இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கான இலங்கைத் தூதர் ரவிநாத ஆர்யசிங்க, மனித உரிமை அவையின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரிட்டனின் சேனல்-4 தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படம், இலங்கை மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் உறுதிபடுத்தப்படாத மற்றும் ஆதாரமற்ற தகவல்களை ஆவணப்படம் கொண்டிருப்பதாகவும் இலங்கை தூதர் ஆர்யசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே, ஐ.நா மனித உரிமை ஆணயத்தில், இலங்கை ராணுவத்தினர் குறித்த சேனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர், அவ்வாறு திரையிட்டால் அது, விதிகளை மீறிய செயலாகும் என்றும் கூறியுள்ளார்.

ஜெனிவாவில் தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை அவையின் கூட்டத்தில், வரும் வெள்ளிக்கிழமையன்று சேனல்-4 தொலைக்காட்சியின் இந்த ஆவணப்படம் திரையிடப்பட இருக்கிறது.

இந்த ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் மற்றும் இலங்கைத் தமிழர்கள், விடுதலைப் புலிகள் ஆகியோரை கொடூரமான முறையில் ராணுவத்தினர் கொலை செய்வது குறித்த காட்சிகள் அடங்கியுள்ளன.

இதனிடையே அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் குறித்து, இந்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட போர்முறை அரங்கேற்றம் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியபோது, ’’உலகில் வேறு எங்கும் நடத்திராத இனப்படுகொலை இலங்கையில் நடத்தபட்டுள்ளது. போர் குற்றவாளியான ராஜபக்சேவை காப்பாற்ற இந்திய அரசு முயற்சிக்கக்கூடாது. சர்வதேச அளவில் அவர் மீது விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. சபையில் இந்தியாவே கொண்டு வர வேண்டும். ஒரே நாளில் 1 1/2 லட்சம் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டது பார்த்து உலகமே அழுதது. தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிக கொடூரமாக கொல்லப்பட்ட காட்சி எல்லோரையும் பதற வைக்கிறது. இதே போல் தடை செய்யப்பட்ட போர் முறை உலகில் எங்கும் அரங்கேற்றபட்டதில்லை. ராஜபக்சே போர் குற்றவாளி என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வெளி வந்துள்ளன. எனவேதான் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க இன்று பல நாடுகள் முன் வந்து உள்ளன. சரண் அடைய சென்ற விடுதலைப் புலிகளை நிராயுத பாணிகளாக இருந்த அவர்களை கொன்றது, தமிழ் கர்ப்பிணி பெண்களை இரக்கமின்றி துடிதுடிக்க வைத்து கொன்றது இப்படி எவ்வளவோ கொடுமைகள் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இது சர்வதேச அளவில் ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி என்பதை நிரூபித்து உள்ளது. எனவே ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சேக்கு எதிராக வருகிற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :