திருக்கடையூர் கோயிலுக்கு வந்த இலங்கை எம்.பிக்கு எதிர்ப்பு! பயணத்தை ரத்து செய்தார்!!

21.2.13

நாகை மாவட்டம், திருக்கடையூர் மற்றும் திருச்சியில் இலங்கை எம்.பி.க்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தால் இன்று பதற்றம் ஏற்பட்டது. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கரு ரத்னே ஜெயசூர்ய மற்றும் அவரது மனைவி வசந்தா, உறவினர் ரோகன் கமகே ஆகியோர் நாகை மாவட்டம், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வழிபடுவதற்காக திருக்கடையூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் இன்று தங்கியிருந்தனர். ஜெயசூர்யவின் வருகையும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும் திமுக, மதிமுக, பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் ஜெயசூர்ய தங்கியிருந்த விடுதிக்கு முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை எம்.பியை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டுமெனவும் வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர் கோவிலுக்குச் செல்லாமலேயே அவசர அவசரமாக காரில் திருச்சிக்கு புறப்பட்டார். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அவசர அவசரமாக திருச்சிக்கு புறப்பட்டு வந்த ஜெயசூர்ய, வரும் வழியில் தான் தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை திருக்கடையூரிலேயே மறந்து வைத்து விட்டு வந்தது தெரியவந்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 4 மணிக்கு புறப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கொழும்பு செல்ல எண்ணிய அவரது பயணம் பாஸ்போர்ட் இல்லாததால் ரத்தானது.


0 கருத்துக்கள் :