தமிழ்நாடு சென்றிருந்த இலங்கையர் ஒருவரின் மரணத்தில் மர்மம்!

24.2.13

இலங்கையிலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு சென்றிருந்த இலங்கையர் ஒருவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து மதுரையில் புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து, நேற்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தொண்டியை சேர்ந்த 74 வயதான வர்த்தகரான ஹைதர் அலி, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வந்து கொழும்பில் தங்கியிருந்துள்ளார்.
இவர், சில நாட்களுக்கு முன்பு மதுரை மகபூப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் தொண்டியில் உள்ள அவரின் புதல்வியின் வீட்டிற்கு சென்றுவிட்டு, பெப்ரவரி 20ல், மதுரைக்கு வந்த போது வழியில் உயிரிழந்தார்.
அவரது உடல் மகபூப்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஹைதர் அலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக, கொழும்பைச் சேர்ந்த உம்மு சல்மா லியாகத் அலி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
உயர்ஸ்தானிகரகத்தின் உத்தரவுப்படி, தொண்டி பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை வடக்குக்கு பொறுப்பான தாசில்தார் கங்காதரன், தொண்டி பொலிஸ் அதிகாரி தனபாலன் முன்னிலையில், உடலை தோண்டி எடுத்து மருத்துவர் கார்த்திக் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
குறித்த பிரேத பரிசோதனையின் அறிக்கை பொலிஸ் ஆணையாளர், தொண்டி பொலிஸ் நிலையம் மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகரகம் என்பவற்றுக்கு அனுப்ப வேண்டும் என்று பொலிஸ் பொறுப்பதிகாரி ரமேஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :