எங்களுக்கான எங்களது போர்க் களம் நோக்கி அணிதிரள்வோம்!

3.2.13


இந்த முறை அமெரிக்கா ஜெனிவாவில் கொண்டுவரும் தீர்மானம் இறுக்கமாக இருக்குமா?’ என்ற அங்கலாய்ப்புடன் ஒரு நண்பர் கேட்டார். அவரது ஆதங்கம் எனக்கு அவர்மீது அனுதாபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. நம் மத்தியில் வாழும் தமிழர்களில் ஏராளமானவர்கள் அவர் போன்றவர்களாகவே, யாராவது, ஏதாவது செய்யமாட்டார்களா? என்ற ஆதங்கத்துடனேயே வலம் வந்துகொண்டுள்ளார்கள். அதனை அவர்களுக்கும் தமக்கு வசதியானதாகவே தீர்மானித்து விட்டார்கள். உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்குவதற்காகவும், ஐ.நா. மன்றத்தின் பெருங் கதவைத் தட்டுவதற்காகவும் ஈழத் தமிழினம் செலுத்திய விலையும் அர்ப்பணிப்பும் அளப்பரியது. விடுதலைப் புலிகளாக, விடுதலைப் புலிகளின் அணிகளாக, விடுதலைப் புலிகளின் காவலர்களாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளாகளாக… எனப் பல பரிமாணங்களிலும் தமிழீழ விடுதலையின் பங்குதாரர்களாக வாழ்ந்ததனால் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள். கெடுக்கப்பட்டார்கள். சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டார்கள். கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். தமிழினத்தின் எதிர்காலத்திற்கான நம்பிக்கையுடன் களமாடிய அந்த வீர மறவர்களது வரலாற்றுப் பயணத்தின் தொடர்ச்சியே இன்று சிங்கள ஆட்சியாளர்களை ஐ.நா. மன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கால் வரை ஈழத் தமிழினம் நடாத்திய விடுதலை யாகத்தின் நெருப்பு உலகின் மனச்சாட்சியைத் தட்டும் நேரத்தில் நாங்கள் அமெரிக்கா மீதும், ஐரோப்பா மீதும், அனைத்துலக நாடுகள் மீதும் சினிமாத் தனமான நம்பிக்கையை வைத்துவிட்டு, அடுத்த காட்சிக்காகக் காவலிருக்கின்றோம். இது சாத்தியமான, நீதியான அணுகுமுறை அல்ல. விடுதலைப் புலிகளதும், தமிழீழ மக்களினதும் இலட்சியப் பற்றும், ஈகமும் தமிழீழ விடுதலைக்கான பாதையை மிகச் சரியான பாதையில் நகாத்தி ஐ.நா. மன்றம்வரை கொண்டு வந்துள்ளது. அங்கே, எங்களுக்கான நீதியை வென்றிடும் போரின் தொடர்ச்சி களத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமே கையளிக்கப்பட்டுள்ளது. அதனை ஒவ்வொரு தமிழனும் தனக்கான போராட்டமாகவும், வரலாற்றுக் கடமையாகவும் கையேற்கும் போதே தமிழீழ விடுதலை சாத்தியமானதாக மாறும். விடுதலைப் போராட்டத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை முற்று முழுதான தோல்வியாகத் தீர்மானித்து அதற்குள் வாழவும் முற்படும் எம்மவர்கள் சிலர், அதற்கான காரணங்களையும் தம்முடன் கூடவே எடுத்துச் செல்கின்றார்கள். ‘நீங்கள் பிரிந்து நிற்பதால், நாங்கள் எதற்குமே வருவதில்லை’ என்று ஒருவர் புறைபட்டுக்கொண்டார். நீங்கள் என்று அவர் யாரைக் குறிப்பிடுகின்றார்? தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து தப்பித்து ஓடமுடியாத வரலாற்றுக் காலத்திலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதற்காகத் தன்னைத் தவிர்த்து ‘நீங்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். புலம்பெயர் தேசத்தில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் என்பது எவரையும் சார்ந்தது அல்ல. அது தேசம் சார்ந்து, எங்களது தேசத்தின் மக்களது விடுதலை சார்ந்து பயணிக்கும் ஓர் அறப் போராட்டம். அதில், துணிந்தவர்களும், அர்ப்பணிப்புள்ள இதயம் கொண்டவர்களும் முன்னே செல்கின்றாhகள். எங்களுக்கான பாதையினை செப்பனிட்டு வழி காட்டுகின்றார்கள். அதில் நீங்கள், நாங்கள் என்ற வேற்றுமைக்கு இடமே இல்லை. இன்னும் பல ஆற்றலுள்ளவர்களும், அற்புதமானவர்களும் புலம்பெயர் தேசங்களின் போர்க் களங்களுக்குள் வரவேண்டும். அவர்கள் இன்னமும் வேகமாக அதனை முன் நகர்த்த வேண்டும் என்பதே இந்தக் களத்தில் பங்கேற்றும் அனைவரது ஆவலுமாக உள்ளது. சிலர், இன்னமும் ஒரு வசதியான கேள்வியைக் கொண்டு திரிகின்றார்கள். ‘இறுதி யுத்த காலத்தில் சேர்க்கப்பட்ட பணம் எல்லாம் அங்கே போகவில்லையாம். அதை அவர். அவர் சுருட்டிக்கொண்டுவிட்டார்களாம்;’ என்ற தத்துவத்துடன் தமிழீழ விடுதலைத் தளத்தின் தனக்கான கடமையிலிருந்து நழுவிக்கொள்ளப் பார்க்கின்றார்கள். பணம் புளங்கும் அத்தனை இடங்களிலும் தவறானவர்கள் தவறுகளைச் செய்ய முற்படுவார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டமைப்பு பலமாக இருந்த காலத்தில் அதற்கான சாத்தியமே இல்லாத கட்டுப்பாடுகளும், படிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. நாம் செலுத்தும் ஒவ்வொரு சதத்திற்குமான கணக்கு கிளிநொச்சியில் பதிவாகியும் இருந்தது. நாம் அனைவரும் வழங்கிய பங்களிப்பு, தமிழீழ விடுதலைப் போரை முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தி வந்தது. விடுதலைப் புலிகள் பாரிய பல வெற்றிகளையும், போர்க் கள சாதனைகளையும் புரிவதற்குக் காரணமாகவும் இருந்தது. களத்தில் தம் உயிரை ஈகம் செய்து பெற்ற வெற்றிகளை நாம் மகிழ்வோடு கொண்டாடி மகிழ்ந்திருந்தோம். ஒரு வகையில், அவர்களது ஈகமும், இழப்புக்களும் எங்கள் புலம்பெயர் வாழ்தலை உறுதிப்படுத்தவும் உதவியது. இன்று, களத்தில் அவர்கள் எல்லாமே இழந்து ஒன்றுமே இல்லை என்று ஆகியபின்னர், கொடுத்தவர்கள் மட்டுமல்ல, கொடுக்காதவர்களும் கணக்குக் கேட்க முயல்வது அரக்கத்தனமானது. அசிங்கமானது. பணத்தைக் கொடுத்தவர்கள் கணக்குப் பார்ப்பதானால், உயிரைக் கொடுத்தவர்களுக்கும், உடமைகளை இழந்தவர்களுக்கும், ஊனத்தை ஏற்றவர்களுக்கும், குடும்பத்தைத் தொலைத்தவர்களுக்கும் நாங்கள் என்ன பதில் வைத்திருக்கின்றோம்? விடுதலைப் போரில் வென்ற இனங்களும் உண்டு. தோற்றுப்போனவர்களும் உண்டு. ஆனால், நாங்கள் இரண்டுக்கும் இடையில், இப்போதும் போராடவும், எமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ளவும் ஆன காலத்தில் நிற்கின்றோம். நாங்கள் அனைவரும் தமிழீழத்தை மீட்கவும், தமிழினத்தை விடுவிக்கவுமான போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் அணிதிரள்வோமாக இருந்தால், அதுவே எமக்கான எதிர்காலத்தையும் நிச்சயிக்கும். அதுவே, தமிழீழ விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து மரணத்திலும் வாழும் எங்கள் தேசத்தின் அற்புதங்களுக்கான காணிக்கையாகவும் அமையும். - சுவிசிலிருந்து கதிரவன்-

0 கருத்துக்கள் :