பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்?

21.2.13

இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்? என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
சர்வதேச சமூகத்தின் கண்ணீர் மீண்டும் ஒருமுறை இலங்கையில் விழுகிறது.
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் 12 வயது பாலசந்திரன் தோட்டாக்களால் துளைத்தெடுக்கப்பட்ட சாட்சியங்களைக் காணும் போது இருதயம் ஒரு கணம் நின்று விட்டது. என்னையறியாமல் கண்ணீர் பெருகிவிட்டது.
பால்வடியும் முகம், பளபளக்கும் மேனி, கனவுகளின் ஈரம் காயாத கண்கள், மிருகம் கூட அவனைக் கண்டு ஒதுங்கிப் போயிருக்குமே. எப்படித்தான் கொல்ல மனம் வந்ததோ. இதயமற்ற இலங்கை இராணுவத்திற்கு?.
மரணம் நெருங்கும் போது என்னதான் நினைத்திருக்குமோ. அந்தக் கொலைக்களத்துக் குலக்கொழுந்து? தொட்டுவிடும் தூரத்தில் இருந்த துப்பாக்கி முனையால் அவன் தொடர்ந்து சுடப்பட்டிருக்கிறான்.

வாழைத்தண்டு மார்பில் வடுக்களாகப் பதிந்திருக்கின்றன துளைத்துப் போன தோட்டாக்கள். கண்கள் என்ற உறுப்பைக் கொண்டதற்காக நான் முதன்முதலில் துக்கப்பட்டேன்.
ஒரு பிள்ளையைக் கொல்லவா பீரங்கி? ஓர் அரும்பை உடைக்கவா அணுகுண்டு? போர்க் குற்றங்களை மறைக்கும் இலங்கை இன்று ஒரு சர்வதேசச் சாட்சியத்தின் முன்னால் தலைகுனிந்து நிற்கிறது.

இலங்கை அதிபர் ராஜபக்ச கோவில் கோவிலாகச் சென்று கும்பிட்டாலும் அறிவுள்ள எந்தக் கடவுளும் இந்தப் பாவத்தை மன்னிக்கப் போவதில்லை. இப்படிப் பிள்ளைக்கறி சமைத்துச் சாப்பிடுபவர்களா, இருக்கும் தமிழர்களுக்கு இரக்கம் காட்டப் போகிறார்கள்?
இந்த நூற்றாண்டை நினைத்தே நான் வெட்கப்படுகிறேன். மனிதன் வானத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறான். மனிதம் பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் வெட்கித் தலைகுனியட்டும். ஐ.நா சபை இது குறித்து ஆழ்ந்த கவலை கொள்ளட்டும்; தீர்வு சொல்லட்டும்.
பால்முகம் மாறாத பாலகனே! பாலசந்திரனே! அபிமன்யு போல அஞ்சாமல் களப்பலி ஆனவனே! அழுகிறோம். சாவை மார்பில் தாங்கிய உன் வீரத்தை எண்ணித் தொழுகிறோம். உன் உடம்பிலிருந்து சிந்திய இரத்தத்தின் எச்சம் இப்போது எங்கள் கண்களிலிருந்து.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :