தாயை காப்பாற்ற பாய்ந்த மகன் மீது துப்பாக்கி சூடு

15.2.13


ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரிமலை அத்தனாவூர் பூசாரி வட்டத்தைச் சேர்ந்தவர் சங்கர், விவசாயி. இவரது மனைவி மங்கம்மாள், மகன் பிரதீப்ராஜ் (13). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வரும் சங்கர், மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதேபோல நேற்று இரவும் சங்கர் அதிக போதையில் வீட்டுக்கு வந்தார். மங்கம்மாளிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரமடைந்த சங்கர், வீட்டில் இருந்த கள்ள நாட்டுத்துப்பாக்கியை எடுத்து மங்கம்மாளை நோக்கி சுடமுயன்றார் இதனை கண்டு திடுக்கிட்டு அவரது மகன் குறுக்கே பாய்ந்தார்.

இதில் பிரதீப்ராஜ் இடுப்புக்கு கீழ் பகுதியில் ரவை குண்டு பாய்ந்தது. அலறிதுடித்தபடியே மயங்கி விழுந்தார். துப்பாக் கியால் சுட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, சிறுவன் பிரதீப்பை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து திருப்பத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் மற்றும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், ராமமூர்த்தி ஆகியோர் அத்தனாவூருக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கள்ள நாட்டுத் துப்பாக்கியால் மகனை சுட்ட சங்கரை கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துக்கள் :