பாலச்சந்திரன் படுகொலை சனல் 4 படங்கள் - இலங்கையின் மனித உரிமை மீறல்களின் சாட்சி அமெரிக்கா அதிர்ச்சி!

20.2.13

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் இலங்கைப் படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு இராணுவ காவல் அரண் ஒன்றில் வைத்திருந்து பின் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து அமரிக்கா ஆழ்ந்த கலையை வெளியிட்டுள்ளது.
 
வோசிங்டனில் நேற்று (19.02.13) இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த தனது நிலைப்பாட்டை அமரிக்கா வெளிப்படுத்தி உள்ளது.
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ந்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் இறுதிப் யுத்தத்தில் அனைத்துலக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக் கூறுவதற்கான செயற்பாட்டு வடிவத்திற்கு அமரிக்கா தனது ஆதரவையும் வலியுறுத்தலையும் தெரிவித்திருந்தது.
 
அத்துடன் நீண்டகாலப் பிரச்சினையாக தொடரும் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையையும் ஏற்கனவே அமெரிக்கா வரவேற்றுள்ளது.
 
அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமரிக்கா இதந்த விடயங்கள் தொடர்பாக சுயமான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அமரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :