பெப்ரவரி - 04: மீண்டும் ஒரு கரிநாளை எதிர்கொள்ளும் தமிழினம்!

1.2.13


எரிமலையின் குமுறலோடும், அக்கினியாய் சிவந்த விழிகளோடும் ஈழத் தமிழினம் இன்னொரு பெப்ரவரி நான்கை எதிர்கொள்ளுகின்றது. அறுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் சிங்கள நரிகளிடம் எம் இனத் தலைவர்கள் ஏமாந்த தினத்தை சிங்கள தேசம் தங்கள் சுதந்திர தினமாகக் கொண்டாட, ஈழத் தமிழர்கள் தமது இறைமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து, இன்று ஏதிலிகளாக, நாடற்ற இனமாக வாழ்விழந்து நிற்கின்றது. 1948 பெப்ரவரி 04 ஆம் திகதி, சிங்கள தேசத்திடம் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கைத் தீவின் இறைமையைக் கையளித்தபோது, தமிழ் மக்களும் வெள்ளையர் ஆக்கிரமிப்பிலிருந்து தாங்கள் விடுபடு வதாகவே மகிழ்ந்திருந்தார்கள். அப்போது, சிங்களக் கொடூரங்கள் தம்மை இரைகொள்ளப் போகின்றது என்று ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்து இருக்கவில்லை. இமயம் முதல் குமரி வரை காந்தியால் இந்திய தேசம் இணைக்கப்பட்ட காலத்தில், சிங்கள தேசத்தையும் நேசத்துடன் பார்த்திருந்த காலம் அது. அதன் பின்னர்தான், தமிழ்த் தலைவர்கள் தாம் சிங்கள நரிகளிடம் ஏமாந்துவிட்டதை உணரத் தலைப்பட்டாhகள். இலங்கைத் தீவில் தமிழ் மக்களது அரசியல் பலம் குறி வைக்கப்பட்டது. 1949 இல் நாகரிக உலகம் வெட்கித் தலை குனியும் வகையில், நான்கு தலைமுறைகளாக ஏழைத் தொழிலாளர்களாக அடிமை வாழவு வாழ்ந்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமை அன்றைய முதலாவது பிரதமரான டி.எஸ். சேனநாயக்கவால் பறிக்கப்பட்டது. அவரது அதே ஆட்சிக் காலத்தில்தான், தமிழர்களது பாரம்பரிய வாழ் நிலத்தையும் அபகரிக்கும் சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. உலகில் எந்தத் தலைவனும் தன் நாட்டை வளப்படுத்துவேன், மக்களை வாழ வைப்பேன் என்ற வாக்குறுதிகள், செயல் திட்டங்கள் மூலமாகவே ஆட்சிக்கு உரியவனாகின்றான். சிங்கள தேசம் அந்த உன்னத சிந்தனைகளிலிருந்து விலகி, ஈழத் தமிழர்களுக்கு எவன் அதிக அழிவினைக் கொடுக்கின்றானோ, அவனே ஆட்சிக்குரியவன் என்ற வரலாற்றைத் தொடர்ந்தது. 'நான் ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்ற வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் அடுத்த ஆட்சியாளனாக பண்டாரநாயக்க 1956 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்த காரணத்தால், 1958 இல் சிங்கள ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்துடன் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது. படிப்படியாக சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் தமிழர்களது நிலங்கள் மட்டுமல்ல, உடமைகளும், வேலைவாய்ப்புக்களும் பறித்தெடுக்கப்பட்டது. அதனை சாத்வீகமாக எதிர்த்த தமிழர்கள் மீது 1971 இல் மீண்டும் தாக்குதல் நடாத்தப்பட்டது. அதில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். தமிழாகளது சொத்துக்கள் சூறையாடப்பட்டது. எரியூட்டப்பட்டது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளாக் கப்பட்டு, படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களது சாத்வீகமான போராட்டங்கள் சிங்கள தேசத்தால் கொடூரமாக நசுக்கப்பட்ட காரணத்தாலும், தொடர்ந்தும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்ட காரணத்தாலும் சிங்கள தேசத்திடம் தமிழர்களது சாத்வீகப் போராட்டம் தோல்வியுற்ற நிலையில், வேறு தெரிவுகளற்ற நிலையில், தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள ஆட்சியாளர்களது ஆயுத வல்லமைக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய கட்டாயம் தமிழ் இளையோர் மத்தியில் உருவாகியது. கறுப்பு ஜுலை என நினைவு கூரப்படும் 1983 இன வன்முறை அந்த ஆயுதப் போராட்டம் மீதான அவசியத்தை ஈழத் தமிழர்கள் மத்தியில் வேகப்படுத்தியது. ஈழம் தமிழர்கள் விடுதலைப் புலிகள் ஆனார்கள். விடுதலைப் புலிகள் பின்னே அணி வகுத்தார்கள். சிங்கள வன்கொடுமையாளர்கள் மத்தியில் உருவான பேரச்சம் மீண்டும் ஒரு இனக் கலவரத்தின் மூலம் தமிழர்கள் பலி கொள்ளப்படுவது தவிர்க்கப்பட்டது. தமிழர்கள் மிண்டும் தலை நிமிர்ந்தார்கள். அந்த நிலமை 2009 மே 18 வரை மட்டுமே நீடித்தது. சிங்கள தேசத்தால் மீண்டும் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்டது. கொடூரமாக ஒடுக்கப்பட்ட ஈழத் தமிழினத்தின் ஒற்றை நம்பிக்கையாக புலம்பெயர் தமிழர்களாகிய நாங்களே உள்ளோம். அவர்களை மீட்கவும், காக்கவும் தமிழ்த் தேசியத்தால் கையளிக்கப்பட்ட கட்டளைகளுடன் நாம் தொடர்ந்து பயணிக்கும் வரலாற்றுக் கடமையைக் கொண்டுள்ளோம். இலங்கைத் தீவின் இறைமை சிங்கள தேசத்திடம் சென்றடைந்த பெப்ரவரி 04 இனை ஈழத் தமிழினம் என்றுமே கொண்டாடும் வகையிலான எந்த நியாயத்தையும் சிங்கள தேசம் தமிழீழ மக்களுக்கு வழங்கவில்லை. மாறாக, ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது உறவுகளைக் கொடுரமாகக் கொன்று குவித்த மே 18 ஐ சிங்கள தேசத்தின் வெற்றி நாளாக அறிவித்து சிங்கள தேசம் இன்னொரு கோர முகத்தைப் பதிவு செய்துள்ளது. சுதந்திர இலங்கைத் தீவில், அதன் சம பங்காளரான ஈழத் தமிழர்களுக்குத் தாம் இழைத்த அநீதி குறித்து சிங்கள தேசம் என்றுமே வருந்தப் போவதில்லை. சிங்களக் கொடூரங்களால் பாதிப்புக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை. 21 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இன அழிப்பு யுத்தத்தைத் தமிழினத்தின்மீது நடாத்தி இலட்சத்திற்கும் அதிகமான மனிதப் படுகொலைகளையும், வெறியாட்டங்களையும் நிகழ்த்திய சிங்கள தேசம் அதற்காக வெட்கப்படப் போவதில்லை. இந்த நிலையில், ஈழத் தமிழர்களாகிய நாம், சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைத் தமிழினத்தின் கரி நாளாகத் தொடர்ந்தும் புறக்கணிப்போம். ஈழத் தமிழர்கள் தன்னாட்சி உரிமையுடன் தலை நிமிர்ந்து வாழும் காலம் வரை முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக, புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப் போரை ஜனநாயக வழிகளில் முன்னெடுப்பதில் அனைத்துத் தமிழர்களும் அணி திரள வேண்டும். அந்த அணிதிரள்தல்களுக்கான களத்தினை பிரான்சில் தமிழீழ மக்களவையினராகிய நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். முள்ளிவாய்க்காலின் நான்காவது ஆண்டில் தமிழீழ மக்களவைகளினால் நிகழ்த்தப்படும் ஜனநாயகப் போர் அதி உச்ச நிலையை எட்டியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா. முன்றலில் நிகழ்த்தப்படவுள்ள ஜனநாயகப் பெரும் சமர் எமது தாயக விடுதலைப் பாதையினைத் துரிதப்படுத்தும். அதை நோக்கிய காலப் பகுதியில் வரும் சிங்கள தேசத்தின் சுதந்திர நாளில் நாம் மீண்டும் ஒரு உறுதி எடுத்துக் கொள்வோம். எங்கள் தேசத்தின் முகடுகளில் தமிழீழக் கொடி பறக்கும் காலத்தில், அயல் நாடான சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தில் உரி மையுடன் பங்கு கொள்வோம். அதுவரை எங்களது உரிமைக்கான குரல்களை புலம் பெயர் தேசங்களின் வீதிகளில் எல்லாம் ஒலிக்கச் செய்து உங்கள் தூக்கத்தைக் கலைப்போம். எதிர்வரும் பெப்ரவரி 4 அன்று பாரிஸ் நகரில் உள்ள உங்கள் தூதரகத்து வாயில் அடைக்கும் வகையில் நாங்கள் திரண்டு வந்து சிங்களக் கொடூரங்களை உலகிற்கு உரத்துச் சொல்வோம். எங்கள் தாயகத்திலிருந்து இறுதிச் சிங்களப் படையினன் ஓடிச் செல்லும்வரை எங்கள் போராட்டம் ஓயாது. உங்கள் சுதந்திரத்திற்கும் அர்த்தம் கிடையாது. தமிழீழ மக்கள் பேரவை - பிரான்ஸ்

0 கருத்துக்கள் :