தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது

12.1.13

ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார். சவூதி அரேபியாவில் 2005 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சென்ற ரிசானா, ஒரு வாரக்காலத்தில் குறித்த வீட்டின் குழந்தைக்கு புட்டிப்பால் ஊட்டும் போது குழந்தை இறந்து போனது. இதனையடுத்து அந்தக் குழந்தையை கொலை செய்த குற்றம் ரிசானா மீது சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் இடம்பெற்ற போது ரிசானா 17 வயதை கொண்டிருந்தார். எனினும் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டபோது அதனை சர்வதேச சமூகம் கண்டித்தது. ரிசானா நபீக் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் போது அவருக்கு மொழியாக்கம் உட்பட்ட சட்ட உதவிகள் உரியமுறையில் வழங்கப்படவில்லை. அத்துடன் அவர் உடல் ரீதியாக தாக்கப்பட்டே குற்றப்பத்திரிகையில் கையொப்பமிடச்செய்யப்பட்டார் என்று நவநீதம்பிள்ளையின் பேச்சாளர் ரூபட் கொல்வெலே தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மரண தண்டனை விதிக்கும் செயற்பாடுகள் சவூதி அரேபியாவில் அதிகரித்து வருகின்றன. இது கண்டிக்கதக்கது. எனவே சவூதி அரேபியாவும் சர்வதேச நியமங்களை ஏற்று மரண தண்டனை விதிப்பதை நிறுத்தவேண்டும் என்று நவநீதம்பிள்ளை கோரியுள்ளதாக கொல்வேலே தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :