மாணவர் புரட்சி - விடுதலையை வென்றெடுக்கும் தந்திரங்களும் தோற்கடிக்கும் தந்திரங்களும்

10.1.13


யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்தும் விடுதலை செய்யப்படவில்லை என்று வானொலியில் வாசிக்கப்பட்ட செய்தியைக் கேட்டது முதல் மனம் உள்ளுக்குள் குமுறத்தொடங்கியது. அதுவே இப்பத்தியின் ஆரம்பமாயும் ஒரு விடயத்தை பகிரங்கமாக இச்சந்தர்பத்தில் சொல்லிவிடவும் வழிகோலியது.
ஒரு போராடும் இனத்தில் புரட்சியின் வித்துக்கள் மட்டுமே கருவறையிலும் பள்ளிக்கூட அறைகளிலும் கல்லறைகளிலும் என எல்லாச் சூழலிலும் ஆரோக்கியமாகவே இருக்க வல்லன. பள்ளிக்கூட அறைகளில் மட்டுமே அது துளிர்விட ஏதுவான சாதகச்சூழுல் நிரம்பிக் காணப்படுகின்றது.
 என்னைப் பொறுத்தவரையில யாழ் பல்கலைக் கழகத்தில் அன்றைய தினம் நடந்தது “தான்தான் புரட்சியின் ஆன்மா என்று அறிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கப்படாமல் தோன்றியவுடன் அடக்கப்பட்ட ஒரு புரட்சியே”.
பல போராட்டங்கள் தோற்றுப்போகக் காரணம் புரட்சியைத் தக்கவைக்க முடியாமையும் புரட்சி தொடர தேவையான புறச்சூழல் இல்லாது போதலுமே ஆகும்.
விடுதலையை வென்றெடுக்கும் தந்திரம் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் சமூகமாக தமிழ்ச் சமூகம் உள்ள சூழலில். ஆணையிடுதல் இன்றி வெளித்தோன்றிய யாழ் பல்கலைக்கழகப் புரட்சியின் பெறுமதி போராடுபவர்களிலும் பார்க்க ஆக்கிரமிப்பாளர்களிற்கு நன்கு புரிந்திருக்கின்றது என்பதையே களநிலவரம் கைகாட்டி நிற்கின்றது.

அதனாலேயே எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் மாணவர்கள் புனர்வாழ்வின் பின்னரே விடுவிக்கப்படுவார்கள் என்று அடித்துக்கூற தலைப்பட்டுள்ளது இலங்கை அரசு. ஈழத்தமிழர்களின் விடுதலை என்பது இன்றைய நிலையில் எதிர்த்தல் அனுசரித்தல் என்ற மூலக்கூறுகளால் உருவாக்கப்படவேண்டிய ஒரு மூலகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில்
அனுசரித்தல் மூலம் வளருதல்
அனுசரித்தல் மூலம் அழிந்துபோதல்
எதிர்த்தல் மூலம் வளருதல்
 எதிர்த்தல் மூலம் அழிந்துபோதல்
என்ற நான்கு நெருப்பாறுகளிலும் நீந்திக்கடக்கவேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளதை யாரும் மறுத்துவிட முடியாது.
அனுசரித்தல் என்ற மூலக்கூறு பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்.
ஆனால் எதிர்த்தல் என்ற மூலக்கூறு பற்றி அவசரமாகவும் அவசியமாகவும் பேசவேண்டிய தேவை நிறையவே உள்ளது.
 எதிர்த்தல் என்ற போர்க்குணத்தின் தூய விதைகளாக அன்று இன்று ஏன் என்றும் இருப்பவர்கள் மாணவர் சமூகத்தினரே. உருவாகிய ஒரு புரட்சி எவ்வாறு கைநழுவி கையறு நிலைக்குப் போனது எனவும் எங்கும் எப்போதும் உருவாகலாம் என நீறு பூத்த நிலையில் இருக்கும் மாணவர் புரட்சியை அல்லது புரட்சிகளை பாதுகாத்து பலன்பெற மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் அதனை அழிக்க எதிர்த்தரப்புகள் கையாளும் உத்திகளையும் பற்றிச் சிந்திக்கவும் ஆரோக்கியமாக விவாதிக்கவும் வைப்பதே இப்பத்தியின் ஒரே நோக்கமாகும்.
மாறாக யார்மீதும் குறைகூறுவதோ குற்றம் சுமத்துவதோ இப்பத்தியின் நோக்கம் அல்ல என்பதை திட்டவட்டமாக குறிப்பிட விரும்புகின்றேன். இன்றைய நிலையில் எதிர்த்தல் மூலம் அழிந்துபோதல் என்பதை தமிழர்களின் எல்லாத் தலைமுறையினருக்கும் உணர்த்திவிட ஆக்கிரமிப்பாளர்கள் என்ன விலைகொடுக்கவும் என்ன பொய் சொல்லவும் தயாராய் இருக்கின்றார்கள்.
அதற்காகவே நிறைய ஏமாற்றும் தந்திரங்களை கையாள்வவதோடு பல சமூக புதிய புதிய தலைவர்களையும் பொய்மைப் பிரபுக்களையும் தயாரித்து மேடையேற்றி வருகிறார்கள்.
ஆனால் எதிர்த்தல் மூலம் வளருதல் என்ற கோட்பாட்டில் குறிப்பிட்ட அளவு முன்னேறாது விட்டால் விடுதலை என்பது கேள்விக்குறியாகிவிடும் ஆபத்தில் இருக்கின்றது என்பதை தமிழினம் புரிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
அதுவே ஒரு விடுதலைக்கு தேவையான உளவியல் சத்தினை போராடும் இனத்திற்கு வழங்கவல்லது. குழப்பமான நிலையில் விடப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் விடுதலை பற்றிப் பேசுவதும் எதிர்த்தல் மூலம் முன்னேறுவதும் என்பதே எல்லாவற்றையும் விட சவாலான பணி.
அதிக விமர்சனங்களிற்கு உள்ளாகக் கூடியது. நீண்ட நெடிய விடுதலைப் பயணத்திற்கு அதிக வலுச்சேர்க்க வல்லதும் அதுவேதான்.
 இவ்வாறு பேசும்போது எதிர்த்தல் மூலம் முன்னேற புலம்பெயர் தேசங்கள் உட்பட தமிழர் வாழும் நாடுகளில் பல ஐனநாயக அமைப்புக்கள் இருக்கின்றனதானே என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். ஆனால் அங்கேதான் நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்களும் இருக்கின்றன. ஓவ்வொரு அமைப்புகளிற்கும் ஒவ்வொரு பின்புலம் உண்டு. அவர்கள்மீது தமிழ்மக்களிற்கும் பிறமக்களிற்கும் ஒவ்வொருவிதமான பார்வைகளும் அபிப்பிராயங்களும் உண்டு.

அத்துடன் எதிர்த்தல் மூலம் வளருதல் என்பதனை எதிர்த்தல் என்ற வரையறைக்குள் மட்டும் வைத்து வளரவிடாமல் பின்னப்பட்ட சூழ்ச்சிகளும் கவனயீனங்களும் பலவீனங்களும் அங்கங்கே நிறையவே உண்டு. சுருக்கமாக எளிய உதாரணத்துடன் சொல்வதானால் யாரால் அந்த பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்கச்செய்து அந்த மண்ணில் சுதந்திரமாக நடமாட வைத்திருக்க முடியுமோ அவர்களால் மட்டுமே எதிர்த்தல் மூலம் வளருதல் என்ற ஒரு இனவிடுதலையின் சரிபாதி பங்கையும் வலுநிலை வளர் அரசியலையும் செழுமையாக செய்ய முடியும்.
இருக்கின்ற அமைப்புகளையே யானையை கட்டித்தீனிபோடும் நிலைபோல் மக்கள் பார்க்கும்போது இன்னுமொரு அமைப்பா என ஆச்சரியப்படவும் கோபப்படவும் இச்சந்தர்ப்பத்தில் இடம் உண்டு. ஆனால் அதையும் தாண்டி சொல்லியே ஆகவேண்டிய விடயம் ஒன்று உண்டு. அது தவிர்க்கப்படமுடியாததும் கூட. நிறைய கேள்விகளிற்கும் ஐயங்களிற்கும் குழப்பநிலைகளிற்கும் பதில் தரும் வல்லமையும் அதற்கே உண்டு.
 பத்தியின் முற்பகுதியிலேயே குறிப்பிட்டுவிட்டேன் எதிர்த்தல் மூலம் முன்னேற மாணவர்சமூகமே மிகப்பொருத்தமானவர்கள் என்று. இப்போது கோத்தபாயவை விடவோ இலங்கை இராணுவத்தளபதியை விடவோ நாம் அறுதியாகக் கூற முடியும் மாணவர்கள் புனர்வாழ்வின் பின்னரே அதுவும் அவர்களின் நிகழ்ச்சி நிரலின்படியே நிபந்தனைகள் நிரப்பப்பட்டே விடுவிக்கப்படுவார்கள் என்று. புனர்வாழ்வின் பின்னரே விடுதலை செய்யப்படுவார்கள் என்பதில் உறுதியாகவும் அதனை பலமாக பிரச்சாரப்படுத்தவும் இலங்கை அரசு தீவிரம் காட்டுவதில்தான் பெறுமதியும் சூட்சுமமும் அடங்கியுள்ளது.
 இலங்கை அரசைப் பொறுத்தவரையில் புனர்வாழ்வு என்பது பயங்கரவாதிகளிற்கானது. மாணவர்களிடம் வாக்குமூலம் பெறுவதும் அவர்களை விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புபடுத்துவதும் அதற்காகவே. அத்துடன் இன்று இலங்கை அரசின் விசுவாசத்திற்கு உரியவர்கள் 1989 இல் சீன பொதுவுடைமை கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து தலைநகர் பீஜிங்கில் உள்ள தியமென் சதுக்கத்தில் திரண்டு போராடிய நிராயுதபாணி மாணவர்களை ராங்கிகளால் நசித்து கொடூரமாகக் கொன்று மாணவர் புரட்சியை அடக்கிய சீன அரசு.
இப்போது விடயத்திற்கு வருவோம். அம் மாணவர்கள் புலம்பெயர் எந்த அமைப்பினதும் அங்கத்துவர்களாகவோ இளையோர் அமைப்புகளின் அங்கத்துவர்களாகவோ அல்லது தமிழ்நாட்டு மற்றும் பிறநாடுகளின் ஈழ ஆதரவு தமிழ் அமைப்புகளின் அங்கத்துவர்களாகவோ இருந்துவிட இலங்கையில் இடம் இல்லை.
ஆனால் அவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவர்களாக இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் யாராலும் அவர்களை உடனடியாக வெளிக்கொண்டுவரவோ அவர்களின் அன்றாடச் செயற்பாடுகளிற்கு சக்தி பெருக்கவோ முடியவில்லை.
காரணம் இலங்கையின் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சர்வதேச அமைப்பொன்றின் அங்கத்துவர்களாக அவர்கள் இல்லை என்பதுதான். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்காக போராடும் ஒரு சுயாதீன சர்வதேச மாணவர் அமைப்பு ஒன்றுக்கான அவசியமும் அவசரமும் இச்சந்தர்ப்பத்தில் தேவைப்படுகின்றது . அது பற்றி ஒவ்வொரு தமிழனும் தமிழ் அமைப்புகளும் சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். அதில் உலகெங்கும் வாழும் தமிழ் மாணவர்கள் உட்பட சர்வதேச பல்கலைக்கழக கல்லூரிகளின் ஆசிரியர்களும் பேராசிரியர்களும் அங்கத்துவர்களாக இருக்கவேண்டும். சகல தமிழ் மற்றும் பிற அமைப்புகளும் அவர்களிற்கு ஆதரவினை வழங்கமுடியும். மாணவர்கள் புரட்சியை கையில் எடுத்தால் எப்போதுமே தோற்றதில்லை. உலகின் மிக அதிக புரட்சிகளை வெற்றி பெற வைத்ததும் அவர்கள் தான் என்பது வரலாற்றுப் பாடம். இல்லையெனில் தொடர்ந்து பலநூறு மாணவர்களும் மாணவிகளும் கைதுசெய்யவும் காணாமல்போகவும் செய்யப்படுவார்கள். அவர்களை கைது செய்யவும் குற்றம் சுமத்தவும் போதுமான காரணங்கள் அவர்களைச்சுற்றி திட்டமிட்டு உருவாக்கப்படும். புள்ளி விபரங்களுடனும் சான்றுகளுடனும் சர்வதேசத்தின் முன் தீவிரவாதிகளாக காட்டப்படுவார்கள். புனர்வாழ்வுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். இதை ஒரு நடைமுறையாக்கி போராடும் உளவியலை மாற்றியமைப்பார்கள். ஒரு மனிதவாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காக கூட குரல்கொடுக்க முடியாத துயரமான இருளான சூழலை உருவாக்குவார்கள். சர்வதேச மனிதாபிமான போரியல் சட்டங்கள் இருந்தும் பல விடுதலைப்புலிப் போராளிகளை இன்னும் சிறையில் வாடவைத்திருப்பதும் சாகடிப்பதும் போல மாணவர்களையும் சிறையில் வைத்து தினம் தினம் சாகடிப்பார்கள்.
 எதிர்த்தல் மூலம் முன்னேறுதல் என்ற கோட்பாட்டில் தோல்வியடையச் செய்வார்கள். நாங்கள் அவற்றை கண்டித்தோம் எதிர்த்தோம் திரண்டோம் என சிறிய செய்திகளைக்கூட பெரிதாகப் போட்டுவிட்டு செய்வதறியாது தவிப்போம். ஒரு புறம் நுண் இன அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு நாளை நாட்டில் தமிழ் மாணவர்களே உருவாக முடியாத சூழலை படிப்படியாக உருவாகிக்கொண்டு மறுபுறம் மாணவர்கள் படிக்க வந்தால் பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தி பட்டத்தைப் பெற்றுக்கொண்டு சென்றுவிடவேண்டும் என போதனைகளும் ஆலோசனைகளும் இன்னொரு புறத்தில் இருந்து வழங்குவார்கள். இது கண்களை பிடுங்கி எடுத்துவிட்டு பாருங்கள் என்று சொல்வதற்கு ஒப்பாக அமையும். அத்துடன் புரட்சிபற்றிய பெரும் கற்பனைகளில் மட்டும் மிதந்து புரட்சியின் அடிநாதமான ஆன்மாவை அழித்துவிடாது புரட்சி பற்றிய கால நிர்ணயத்திற்கு கணக்கெழுதி காலத்தை வீணடித்துவிடாமல் அதற்கான புறச்சூழலை உருவாக்குவதிலும் மாணவர்களை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துதல் ஒவ்வொருவர் முன்னும் உள்ள கடமையாகும். உலகின் பெரும் புரட்சியாளன் லெனின் கூறியது போல “புரட்சி பற்றிய அனுபவம் எழுதத் தகுந்ததல்ல அனுபவிக்கத் தகுந்தது” என்பதற்கு அமைய அதனை அனுபவிக்க போர்க்குணத்தின் வித்துக்கள் எம்மிடம் நிறையவே உள்ளன. நாம் சரியான புறச்சூழலை உருவாக்கினால் மட்டும் போதும். யாரினதும் ஆணையிடுதல் இல்லாமல் இனஅழிப்பின் படிமுறைச்செயற்பாடுகளால் தானாக வெளித்தோன்றி வலு நிலை அரசியல் வடிவம் பெறும். கனமான கனவினை வென்றுதரும். சிந்திப்போம்! செயற்படுவோம். - பிரம்மாதவன்

0 கருத்துக்கள் :