கொலைக்களமான வன்னியில் மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள்...

23.1.13


இவ்வகையான போர்ச் சுற்றுலாத் திட்டமானது சிறிலங்காவில் வாழும் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டையோ அல்லது உள்ளுர் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையோ ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும். இவ்வாறு THE TIMES OF INDIA வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ல் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ள சிறிலங்காவின் கொலைக் களங்களின் மேற்பரப்புக்களில் மனித எலும்புக்கூடுகள் மற்றும் மண்டையோடுகள் என்பன காணப்படுவதாகவும் இந்த இடங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவே இவை இவ்வாறு வெளித்தெரிவதாக இங்கு பயணம் செய்துள்ள உள்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். 'இது ஒரு பயங்கரமான காட்சியாகும்' என அண்மையில் சிறிலங்காவின் கொலை வலயங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த ஒருவர் குறிப்பிட்டார். இங்கு பெண்களின் சேலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளின் எச்சங்கள் மற்றும் புதர்களின் கீழ் கைப்பெட்டிகள் மற்றும் சிறார்களின் உடைகள் போன்றன காணப்படுவதாகவும் குறித்த அந்த நபர் தெரிவித்தார். "முன்னாள் யுத்த வலயங்களில் வாழ்ந்த மக்கள் இவ்வளவு ஒடுங்கிய மிகச் சிறிய பகுதியில் எவ்வாறு ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் என்பதை எவரும் கற்பனை செய்து பார்க்கமுடியாது" என சிறிலங்காவின் கொலைக்களங்களுக்கு அண்மையில் பயணம் செய்திருந்த இந்த நபர் மேலும் தெரிவித்தார். இந்த வலயங்களில் மனிதர்கள் விட்டுச் சென்ற எச்சங்களை அருகில் சென்று பார்ப்பதற்கு அல்லது அவற்றை எடுப்பதற்கு தான் அச்சமுற்றதாகவும் அங்கே நிலக்கண்ணி வெடிகள் போன்ற வெடிக்காத பொருட்கள் காணப்படலாம் என்ற அச்சமே காரணம் எனவும் இந்த சுற்றலாப் பயணி மேலும் தெரிவித்தார். 2009ல் தமிழ்ப் புலிகள் தமது இறுதித் தளத்தை முள்ளிவாய்க்கால் என்ற கிராமத்தில் அமைத்திருந்தனர். இந்தக் கிராமத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் 150,000 இற்கும் மேற்பட்ட மக்களும் அகப்பட்டனர். 2009ன் முதல் சில மாதங்களில் முள்ளிவாய்க்கால் என்கின்ற இச்சிறிய கிராமத்தில் இடம்பெற்ற யுத்தமும் அதன் போது மக்கள் அனுபவித்த துன்பங்களும் கனதியானவை. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதியுத்தமானது 'சிறிலங்காவின் சிறேபிறெனிக்கா' the Srebrenica of Sri Lanka எனக் கூறப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தம் அரங்கேற்றப்பட்ட போது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் என்பன இழைக்கப்பட்டதாக ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியானது 2009ன் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சில மக்கள் 40 தடவைகள் வரை இடம்பெயர்ந்து இறுதியில் சதுப்பு நிலப்பகுதியான முள்ளிவாய்க்காலை அடைந்திருந்தனர். இந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் இடம்பெயரும் போதும் தாம் இறந்து விடுவோம் என்ற எதிர்பார்ப்புடனேயே வாழ்ந்தனர். "யுத்தம் இடம்பெற்ற ஓரிரவில் மட்டும் 3000ற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 4000 பேர் வரையில் காயமடைந்தனர். மக்கள் வாழ்ந்த 'யுத்த வலயமற்ற' பகுதிகளில் ஆட்லறி, மோட்டார் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள், கொத்துக் குண்டுகள் போன்றன வீசப்பட்டன" என கொடிய யுத்தத்தில் அகப்பட்ட கத்தோலிக்க மதகுரு ஒருவர் போப்பாண்டவருக்கு எழுதிய மடலில் தெரிவித்திருந்தார். "சிறார்கள் மற்றும் குழந்தைகள் கதறுகின்றனர். பெண்களும் வயது முதிர்ந்தவர்களும் நச்சு வாயுக்களாhல் துன்பப்படுகின்றனர். தந்தையர்கள், அன்னையர் மற்றும் எல்லாத் தரப்பினரும் தமது உயிருக்காக போராடுகின்றனர்" என இந்த மதகுரு போப்பாண்டவருக்கு எழுதிய அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் இதனை எழுதிய கத்தோலிக்க பாதிரியார் யுத்தத்தின் இறுதியில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்ததை பலர் நேரில் பார்த்த போதும் இதுவரை இவர் தொடர்பான தகவல்கள் வெளிவரவில்லை. கடந்த மூன்றரை ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் பிரதேசமானது சிறிலங்கா இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகிறது. தற்போதும் கூட முள்ளிவாய்க்காலில் பெருமளவான இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதான வீதியில் பயணிப்பவர்களை நிறுத்தி அச்சுறுத்துவதாகவும் உள்ளுர் வாசிகள் கூறுகின்றனர். இங்கு வாழும் உள்ளுர் மக்கள் வெளியாட்களிடம் அரசியல் விடயங்களை கதைப்பதற்கு அச்சப்படுவதாக இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். கணவனை இழந்த பெண்கள் பாலியல் மீறல்களுக்கு உட்படுவதாகவும் இந்தப் பெண்கள் தனிமையான கிராமங்களில் வாழ்வதுடன் இவர்களை சிறிலங்கா பாதுகாப்பு படை வீரர்கள் விசாரணை என்ற பெயரில் தொல்லைக்கு உட்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. யுத்தம் முடிந்த பின்னர் தற்போது யுத்த வலயமானது போரில் உயிர்தப்பிய ஏனைய மக்கள் மீள்குடியேறுவதற்காக பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாம் எவ்வாறு எதிரிகளைத் தோற்கடித்தோம் என்பதை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதற்காக சிறிலங்காவின் கொலை வலயங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது சுற்றலா மையமாக மாற்றி வருகின்றனர். பல பத்தாண்டுகளாக தமிழ்ப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சிறிலங்காவின் வடபகுதிக்கு தென்சிறிலங்கர்கள் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது யுத்தம் முடிந்த பின்னர் பெரும்பாலான சிங்கள மக்கள் வடபகுதிக்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர். பேருந்துகளில் வடபகுதிக்குச் செல்லும் சிங்கள மக்கள் புலிகளின் தலைவரின் வீடு, இவரது நிலக்கீழ் பதுங்குகுழி, நீச்சல் தடாகம் மற்றும் சூட்டுப் பயிற்சி மைதானம் போன்றவற்றைப் பார்வையிடுகின்றனர். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் 'பயங்கரவாதிகளின் நீச்சல் தடாகம்' போன்ற தலைப்புக்கள் இடப்பட்டுள்ளன. இதை விட புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சியில் விழுந்து கிடக்கும் நீர்த்தாங்கியின் அருகில் நினைவுச்சின்னங்களை விற்கும் கடை ஒன்று காணப்படுகிறது. இவற்றுக்கு அடுத்ததாக சிறிலங்கா இராணுவத்தால் நடாத்தப்படும் தேநீர்ச்சாலை ஒன்றும் அமைந்துள்ளது. ஆனால் சிறிலங்காவின் வரலாற்றில் போரின் போது பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக எந்தவொரு பதிவும் ஒரு வார்த்தை கூடக் காணப்படவில்லை. அத்துடன் யுத்த வலயத்தில் வாழ்ந்த மக்கள், வைத்தியசாலைகள், உணவுக்காக வரிசையில் நின்ற மக்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி சிறிலங்காத் தரப்பால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான பதிவுகளும் காணப்படவில்லை. 2009 யுத்தத்தின் போது பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் தமது உறவுகளை இழந்திருந்தனர். "புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீடு மற்றும் மரணித்த புலிகளின் கல்லறைகள் போன்றவற்றை சிறிலங்கா அரசாங்கம் அழித்த போதிலும் புலிகளின் நிலக்கீழ் பதுங்குகுழி மற்றும் நிர்மாணிக்கப்பட்ட போர்க் கால அருங்காட்சியகம் போன்றவற்றை மட்டும் அழிக்காதிருப்பதற்கான காரணம் என்ன? இந்த விடயத்தில் என்ன வகையான விவாதம் மேற்கொள்ளப்படுகிறது?" என கனடாவின் ரெரான்ரோ ஜோர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்பின் படிப்பை மேற்கொள்ளும் அமர்நாத் அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வகையான போர்ச் சுற்றுலாத் திட்டமானது சிறிலங்காவில் வாழும் இரு சமூகத்தவர்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டையோ அல்லது உள்ளுர் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையோ ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாகும். யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகளின் பின்னர் யுத்தவலயத்தில் வாழும் உள்ளுர் மக்களின் வாழ்வியலுக்கும் இந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடம்பர சுற்றுலாப் பயண விடுதிகளுக்கும் இடையில் பெருமளவான வேறுபாடுகள் காணப்படுகின்றன. யுத்த வலயத்தில் காணப்படும் பனைமரங்களின் மேற்பகுதிகள் எரிந்து காணப்படுவதானது யுத்தத்தின் தாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. பெருமளவான கட்டடங்கள் போரின் போது அழிக்கப்பட்டுள்ளன. வீதியோரங்களில் காணப்படும் வீடுகள் அல்லது குடிசைகள் கூரைகளற்று காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் கூறுகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் தமது வீடுகளைக் கட்டுவதற்கு அல்லது மீளத்திருத்துவதற்காக வெளிநாடுகளில் வாழும் தமது உறவுகளிடம் அல்லது வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். *The writer of this piece is the author of "Still Counting The Dead"- a collection of survivors' stories from the final phase of the Sri Lankan civil war.

0 கருத்துக்கள் :