கண்ணகியும் சோனியா காந்தியும் ஒன்று!

22.1.13


இனிய ஊடக நண்பர் ஒருவர் உட்பட நண்பர்களுடன் நேற்று உரையாடிகொண்டிருந்தேன். உரை ஆடலில் திடீரென ஒரு விடயம் சட்டென பேசப்பட்டது. அது இதுதான். << கண்ணகியும் சோனியா காந்தியும் ஒன்று>> என்பதுதான் அது. ஏன் என்றால், பதில் சுவாரசியமாக இருந்தது. சுவாரசியம் உவமை செயல்பாட்டில். தன் கணவன் கோவலனை, மதுரை மன்னன் கொன்றுவிட்டான் என்பதற்காக முழு மதுரையையும், கண்ணகி எரித்துவிட்டாள் என்று இளங்கோ அடிகளின் காவியம் கூறுகிறது. தன் கணவன் ராஜீவை புலிகள் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக முழு ஈழத்தையும், சோனியா எரித்துவிட்டார் அல்லது அதற்கு உடன்பட்டுவிட்டார் என்று சமகால ஈழத்து வரலாறு கூறுகிறது. அப்போ, கண்ணகியும் சோனியா காந்தியும் ஒன்றுதானே? என என் நண்பர் கேட்டார். துன்பமும், ஆயாசமும் நிறைந்த கேள்வியும் பதிலும் இது. நான் இன்னும் நினைத்துகொண்டேன், சீதையை தேடிவந்த அனுமனின் வாலில் தீவைத்ததால் அவர் முழு இலங்கையையும் கொளுத்திவிட்டதாகவும் இன்னொரு காவியம் கூறுகிறது. சிலம்பு கதையையும், இராமாயண கதையையும் விடுவோம். ஏதோ ஒரு காலத்தில் நடந்த விடயங்கள் மெருகூட்டபட்டு, மிகைப்படுத்தப்பட்டு, இன்று காவியங்களாக சொல்லப்படுகின்றன. ஆனால் ராஜீவ் கொலையும் நான்காவது ஈழப்போரும், அதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் கண் முன்னால் நடந்த சமகால சம்பவங்கள். ராஜீவ் கொலை என்பது பல ஆண்டுகளுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு, பின்னர் சந்தர்ப்பம் வாய்த்ததும் நிறைவேற்றப்பட்டது. அதாவது இது ஒரு பழி வாங்கும் செயல். அதற்கு சும்மா அரசியல் காரணம் என்ற சாயம் பிறகு பூசப்பட்டது. இதுதான் உண்மை. மறுபுறத்தில் அது ஒரு அரசியல் அறிவற்ற முட்டாள்தனமான செயல். பழிவாங்கும் ஆத்திர உணர்வு கண்ணை மறைத்ததால், தான் செய்யும் முட்டாள்தனம் முடிவு எடுத்தவரின் அறிவுக்கு எட்டவில்லை. இந்த கொலைக்கு இந்திய அரசியல்வாதிகள் சிலர் உதவினார்கள், அதுபற்றி “புதிய” தகவல்களை இன்று பலர் ஆய்வு புத்தக வடிவில் வெளியிடுகிறார்கள் என்பது எல்லாம் இரண்டாம் பட்சம். கொலையின் மூலம் எது என்பது உலகறிந்த உண்மை. அன்று கொலையை தீர்மானித்து நடத்திவிட்டு பிறகு அதற்கு அரசியல் காரண சாயம் பூசியதைபோல், இன்று இந்த “புதிய” தகவல்களை வைத்துகொண்டு நடைபெற்ற முட்டாள்தனத்தையும், அதற்கு பின்னால் தலைவிரித்து ஆடிய ஆத்திர பழிவாங்கும் உணர்வையும், சிலர் இன்றும் பூசி மெழுக பார்க்கிறார்கள். இது இப்போதாவது நிறுத்தப்படவேண்டும். மீண்டும் மீண்டும் முட்டாள்தனம் வேண்டாமே. இது இத்துடன் முடியவில்லை. இன்னொரு கோணம் உள்ளது. எப்படி பழி வாங்கும் ஆத்திர உணர்வு, புலிகளை ஆட்டிப்படைத்து, கண்ணை மறைத்து முட்டாள்தனமான காரியத்தை அன்று செய்வித்ததோ, அதே பழி வாங்கும் ஆத்திர உணர்வு, காங்கிரஸ் ஆட்சித்தலைவரையும் ஆட்டி படைத்துவிட்டது. அதன் விளைவு பெருந்தொகை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த படுகொலை, ரத்தம், சோகம், துன்பம், துயரம், கண்ணீர் இவற்றை தாண்டி அதனாலேயே, அன்றுபோலவே, அதுபோலவே, இதுவும் இன்று முட்டாள்தனமான காரியமாகவும் அமைந்துவிட்டது. அரசியல், சாணக்கியரீதியாக இந்திய பேரரசு செய்த முட்டாள்தனமாக அமைந்துவிட்டது. ராஜீவ் கொலை என்ற புலிகளின் தூரப்பார்வையற்ற அரசியல் முட்டாள்தனம், வரலாறுகாணா ஈழப்படுகொலையில் அப்பாவி தமிழீழ மக்களை கொண்டு சென்று தள்ளிவிட்டது. தமது மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்படும்போது, கைகளை பிசைந்துகொண்டு, செய்வதறியாது, தடுத்து நிறுத்த கையாலாகாதவர்களாக, மனவேதனையுடன் மடிவதை தவிர புலிகளுக்கு வேறு வாய்ப்பே இருக்கவில்லை. அதேபோல், இலங்கை போருக்கு உரிய அனைத்து அடிப்படைகளையும் ஏற்படுத்திகொடுத்து, இறுதிவரை சென்று முடித்துவிடுங்கள் என்று பச்சைக்கொடி காட்டி, இறுதி கணத்தில் அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொல்லப்படுவதையாவது தடுப்போம் என வந்த மேற்குலகையும் கட்டிப்போட்டது, சோனியா தலைமையிலான இந்திய பேரரசு. இன்று இந்திய பேரரசின் காலடியில் சீன மகா பேரரசு கடை விரித்துவிட்டது. காங்கிரசின் முட்டாள்தனம், இன்று இந்திய தென் எல்லை வாசற்படிக்கு சீனாவை அழைத்து வந்துவிட்டது. “நீங்கள் பயிற்சி தராவிட்டால், இருக்கவே இருக்கிறது சீனா” என்று இங்கே இவர்கள் திமிருடன் சொல்வது, அமெரிக்காவுக்கு மாத்திரம் அல்ல, இந்தியாவுக்கும்தான் என்பதை புரிந்துகொள்ள சிரமப்பட வேண்டியதில்லை. (உண்மையில் கோட்டபாய ராஜபக்சவின் இந்த திமிரை நான் ரசிக்கிறேன்…….) ஈழ (புலி) வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும், சமகாலத்தில் ஒரே பழிவாங்கும் ஆத்திர உணர்வும், அந்த ஆத்திர உணர்வால் அறிவுக்கண் மறைக்கப்பட்டதும் அதனால் விளைந்த அனர்த்தங்களும்…………………….ஒரு முட்டாள்தனம், ஒரு ஆத்திரம், இன்னொரு முட்டாள்தனத்திற்கும், ஆத்திரத்திற்கும் வழிகோலிவிட்டது. தமது மக்கள் கொல்லப்படும் போது, கைகளை பிசைந்துகொண்டு, செய்வதறியாது, தடுத்து நிறுத்த கையாலாகாதவர்களாக, புலிகள் நின்றதைபோல், இன்று சீனாவை தடுத்து நிறுத்த முடியாமல் இந்திய பேரரசு கைகளை பிசைந்துகொண்டு நிற்கிறது. சோனியா, தன் மகனுக்கு நேற்று முடிசூட்டினார். அந்த மகனும் இது தொடர்பில் கைகளை பிசைந்துகொண்டுதான் நிற்கப்போகிறாரா? முன்பு வடமராட்சி யுத்தத்தின் போது, படை விமானங்களை அனுப்பி அடையாள உணவு பொட்டலங்களை போட்ட ராஜீவின் அடாவடி துணிச்சல் இவருக்கு இருக்குமோ, இல்லையோ, தெரியவில்லை. மனோகணேசனின் முகப்புத்தகத்திலிருந்து…

1 கருத்துக்கள் :

Jack Sparrow சொன்னது…

Do you think Rajiv has been assasinated by LTTE?? not at all, some Indian politicians only stabbed him.LTTE did not murdered him.

FOR MORE DETAILS CLICK THE BELOW LINK.
http://www.youtube.com/watch?v=DCGE5cJ8iVg