ஜெனீவா நோக்கிப் பயணிக்கவேண்டியது புலம்பெயர்ந்த தமிழர்களின் தார்மீகக் கடமை!

31.1.13


எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்கள் தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு முக்கியமான மாதங்களாக இருக்கப்போகின்றன. அதாவது பெப்ரவரி மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரில் சிறீலங்காவுக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இம்முறை கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் முதற்கட்டமாக தற்போது சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பாக உரிய தரப்புக்களுடன் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். அமெரிக்கப் பிரதிநிதிகளின் வருகையே சிறீலங்கா அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனை நிரூபிப்பதுபோன்றே சிறீலங்கா அரசினதும் அதனைச் சார்ந்த அமைச்சுக்களினதும் கருத்துக்கள் அமைந்துள்ளன. சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்கள் மூவருக்கும் எதிர்த்தரப்பு அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்க கூடாது என்று சிறீலங்காவின் இனவாத அமைப்புக்களில் ஒன்றான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டுக்கெதிரான சூழ்ச்சி நடவடிக்கைகளில் சில அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற அமைப்புகளும் ஈடுபட்டு வருவதாக அந்த இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார தெரிவித்தார். அவ்வாறான தரப்புகளின் உறுப்பினர்கள் அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திப்பார்களாயின் மேலும் நெருக்கடியான நிலைமை ஏற்படும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களும் சிங்கள தேசத்தை கதிகலங்கவைத்துள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்கும் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு சர்வதேசம் செயற்படக் கூடாது எனவும் - புலம்பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் வாழுகின்ற நாடுகளின் அரசுக்கு, சிறீலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளக் கொடுக்கும் அழுத்தங்களினால், எமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒருபோதும் நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் எனவும் - இந்தியா சென்றிருந்த சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார். சிறீலங்காவின் உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. சில நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அழுத்தங்கள் காரணமாக, சில நாடுகள் சிறீலங்கா மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. எனினும், வெளிநாட்டு சக்திகளின் அரசியல் உதைபந்தாக சிறீலங்கா செயற்படாது. பெரிய வளங்கள் மற்றும் ஊடக வலையமைப்பின் ஊடாக சிறீலங்காவிற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார். இது புலம்பெயர் மக்களின் பலம்பொருந்திய போராட்டங்கள் மீது சிறீலங்கா அரசு கொண்டுள்ள அச்சத்தையே வெளிக்காட்டுகின்றது. இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது சிறீலங்கா மீது அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சிறீலங்கா தொடர்ந்தும் உதாசீனம் செய்து வருகின்றது எனவும் - இதனால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் சிறீலங்கா மீது நிறைவேற்றப்படவுள்ள பிரேரணை மிகக் கடுமையானதாக அமையவுள்ளது எனவும் - அந்தப் பிரேரணையில் என்ன விடயங்களை உள்ளடக்குவது எனவும் - சிறீலங்கா சென்றுள்ள அமெரிக்க உயர் மட்டக் குழு, கடந்த சனிக்கிழமை பிற்பகல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் ஆராய்ந்துள்ளது. கடந்த வருடம் சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணையை நடைமுறைப்படுத்துவதில் சிறீலங்கா அரசு பின்னடிப்பதை ஆதாரங்களுடன் அமெரிக்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில சிறீலங்கா அரசால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ விஸ்தரிப்பு, இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அராஜக நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்கப் பிரதிநிதிகளிடம் விளக்கமளித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்நிலையில், காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய கூறியிருக்கும் கருத்து பொய்யானது என்றும் - வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எமக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது என்றும் - யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்க துணை இராஜங்க செயலாளர் ஜேம்ஸ் மூர் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தில் அடக்குமுறைகள் பொதுமக்கள் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ்.ஆயர் இல்லத்தில் ஆயரை சந்தித்த அமெரிக்க குழுவினர் சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது யுத்தத்திற்குப் பின்னரான நிலைமைகள், இராணுவ நெருக்கு வாரங்கள், மீள்குடியேற்ற நிலைமைகள், மக்களுடைய நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் அபிவிருத்திகள் மக்களுக்கு போதுமானதாக இல்லை. மீள்குடியேற்றங்களும் இன்னமும் முழுமைப்படுத்தப்படவில்லை. மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை அங்கு உள்ளது. மேலும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை. அங்குள்ள மக்களுடைய வாழ்வாதாரங்கள் முழுமைப்படுத்தப்படவில்லை போன்ற விடயங்கள் தொடர்பில் யாழ். ஆயர் அமெரிக்கக் குழுவிடம் விளக்கமாக எடுத்துக் கூறியிருந்தார். இதுமட்டுமல்லாமல் காணாமல்போனோர் விவகாரங்கள், யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது இராணுவ அடக்குமுறைகள், மற்றும் யுத்தத்திற்கு பின்னரான இராணுவக் குறைப்பு இடம்பெறாமை, இராணுவத்தினர், காணிகளை அபகரித்து வீடுகளை அமைப்பது, மகிந்த நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என்பன தொடர்பிலும் யாழ்.ஆயர் விளக்கியிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அமெரிக்க துணை இராஜங்க செயலாளர் ஜேம்ஸ் மூர் சிறீலங்கா அரசாங்கத்தின் அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காண முடிகின்றது என்றும் - சிறீலங்கா இராணுவத்தின் பிரசன்னங்கள் அதிகரித்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இவற்றை நோக்கும்போது சிறீலங்காவுக்கு ஜெனீவாவில் கடும்பொறி ஒன்று காத்திருப்பதை உணர முடிகின்றது. இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஜெனீவா நோக்கி எழுச்சிபெறவேண்டிய தார்மீகக் கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர் தலையங்கம் நன்றி: ஈழமுரசு

0 கருத்துக்கள் :