“இப்போது விடுதலைப் புலிகள் இல்லை; அதனால் இந்தியா மாறவேண்டும்”

22.1.13

சிறிலங்கா தொடர்பான கொள்கையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் எம்.ஆர். நாராயணசுவாமிக்கு தொலைபேசி மூலம் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இந்தியாவின் பாராமுகம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை எட்டுவதில் இருந்து விலகி நிற்பதற்கு கொழும்புக்கு ஊக்கமளிக்கிறது. விடுதலைப் புலிகள் இருந்த போது கடைப்பிடிக்கப்பட்ட அதே கொள்கையைத் தான் இந்தியா இன்னமும் கடைப்பிடிக்கிறது. இப்போது விடுதலைப் புலிகள் இல்லை. இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் ஏற்படாது. ஜனநாயக உலகை தைரியத்துடன் சிறிலங்கா எதிர்த்து நிற்கிறது. ஏனென்றால், சீனாவின் ஆதரவு அதற்கு உள்ளது. அவர்கள் அமெரிக்காவையோ, ஐரோப்பாவையோ கவனத்தில் கொள்வதில்லை. தம்மால் இந்தியாவையும் சமாளித்துக் கொள்ள முடியும் என்றே அவர்கள் சொல்கிறார்கள். சீனா தம்முடன் இருப்பதால், ஐ.நாவைக் கூட சமாளித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ராஜபக்ச அரசாங்கம் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கை இராணுவ மயப்படுத்தியுள்ளது. முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் குரல்வளையை நசுக்க, சிறிலங்காப் படைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படைக் கட்டமைப்புகளை கட்டியெழுப்புவதாக சிறிலங்கா அரசாங்கம் சொல்கிறது. ஆனால், சிறிலங்கா இராணுவ முகாம்களுக்காக வீதிகள் போடப்படுகின்றன, மின் விநியோகமும் அளிக்கப்படுகிறது, அவ்வளவு தான். தமிழ்க் கிராமங்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளுடன் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட பின்னர் மீளவும் கைது செய்யப்படுகின்றனர். எல்லா இடங்களிலும் இராணுவச் சோதனைச்சாவடிகள் உள்ளன. தமிழ் இளைஞர்களை விரட்டுவதற்கே சிறிலங்கா அரசாங்கம் விரும்புகிறது. நாம் இதைச் சொல்லும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகைப்படுத்துவதாக சொல்கிறார்கள். நாம் சொல்லவில்லை, ஒட்டுமொத்த தமிழர்களினதும் சந்தேகம் இது. சிறிலங்காவின் வட மாகாணம் இப்போது பாலஸ்தீனத்தின் நிலையை ஒத்துள்ளது. வடக்கில், பெருமளவு சிறிலங்கா இராணுவ முகாம்கள் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. சிறிலங்காவுக்கு சீனா, கனரக இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளையும் வழங்குகிறது. சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களின் பிரதிநிதிகளுடன் உண்மையாகப் பேசுவதற்கு விரும்பவில்லை என்பதே யதார்த்தம். அவர்கள் எம்முடன் பேச விரும்பவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பேசலாம் என்கிறார்கள். ஆனால் தெரிவுக்குழுவில் சிங்களக் கட்சிகளே பெரும்பான்மையாக உள்ளன. எனவே எமது யோசனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஒரு முக்கிய விவகாரமாக எடுத்துக் கொள்ளவேயில்லை” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.("புதினப்பலகை")

0 கருத்துக்கள் :