கொக்கட்டிச்சோலை படுகொலையின் நினைவு நாள் இன்று!

28.1.13


தமிழரின் வாழ்வில் சோகம் படிந்த சம்பவங்களில் கொக்கட்டிச்சோலை படுகொலையும் ஒன்று. 1987 தை 28 ஆம் நாள் பலரது உயிர்கள் காவுகொள்ளப்படப் போகிறது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அன்று பாதுகாப்புப் படையினரால் நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட போது கொக்கட்டிச்சோலை பிரதேசமே இரத்த வெள்ளத்தில் படிந்தது. காலங்கள் எத்தனை கடந்து போனாலும் பிரதேசமக்கள் இப்படுகொலை நடந்த நாளை கரிநாளாக பிரகடனம் செய்து வருடாந்தம் துக்கதினமாக அனுஸ்டித்து வருகின்றனர். இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 26வது ஆண்டு நினைவு நாள். இறந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி படுவான்கரை பிரதேசங்களில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் விசேட பூசைகளும், மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் நினைவுக்கோபுர முன்றலில் உறவினர்களால் தீபமேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தலைமையில் இரங்கல் கூட்டமும் இடம் பெறவுள்ளன. இப் படுகொலை கொக்கட்டிச்சோலை படுகொலை என பேசப்படுகின்ற போதும் உண்மையில் அது நடந்தது முதலைக்குடா மற்றும் மகிழடித்தீவு கிராமங்களை அண்டிய இறால்பண்ணை அமைந்திருந்த இடத்திலும் அதனை அண்டிய பகுதியிலுமாகும். இறால்பண்ணை, கொக்கட்டிச்சோலை கமநலசேவையின் சேவகப்பற்று கண்டத்தில் மட்டக்களப்பு மண்முனை வாவியை அண்மித்த முதலைக்குடா, மகிழடித்தீவு கிராமங்களின் கிழக்குத் திசையில் ஆற்று அருகாக நீண்டு பரந்த பலநூறு ஏக்கர் விசாலம் கொண்ட விவசாயக்காணியில் அமைந்திருந்தது. முனைக்காடு, முதலைக்குடா, மகிழடித்தீவு கிராமங்களைச் சேர்ந்த போடிமாருக்கும், தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கும் சொந்தமான காணிகளை மட்டக்களப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் ஏற்பாட்டில், வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் 1984 ஆம் ஆண்டு “செரண்டிப் சீ பூட்ஸ் லிமிட்டெட்” என்ற பெயரில் பாரிய பண்ணை ஒன்றை அமைத்தார். 1983ல் யூலைக் கலவரம் இடம்பெற்று இனமுரண்பாடு தீவிரம் பெற்றிருந்த இக்காலப் பகுதியில், இப்பிரதேசம் இயக்கங்களின் செயற்பாட்டில் இருந்தது. இறால்பண்ணைத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களாக இருந்ததோடு, காரியாலய கடமைகளில் எழுவான்கரையைச் சேர்ந்த சிலரும் ஈடுபட்டிருந்தனர். முதலீட்டாளர்களின் கூடிய வருமானத்தை ஈட்டக்கூடிய பண்ணைத் தொழிற்பாடுகள் அமைந்திருந்தது. இவ்வாறாக பண்ணைத் தொழில் முன்னெடுக்கப்பட்டு வந்தபோது 1987 தை 28 ம் நாள் அதிகாலை படுவான்கரையின் வான்பகுதியில் என்றுமில்லாதவாறு வானூர்திகள் பல வட்டமிடுவதை பிரதேச மக்கள் கண்டனர். ஏதோ நடக்கப் போவதாக நினைத்தது பொய்யாகவில்லை. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் இருந்த நிலையில் அன்றைய நாள், வலையறவு பாலத்தினூடாக கொக்கட்டிச்சோலையை நோக்கியும், வெல்லாவெளி பாதை ஊடாக கொக்கட்டிச்சோலைக்கும் பாதுகாப்பு படையினர் நகருவதாகவும், அவர்களது வரவை தடுக்கும் நோக்கில் விடுதலைப்புலிகள் கைரிமடுப்பாலம், மணற்பிட்டிசந்தி மற்றும் மாவேற்குடா பாலம் ஆகிய இடங்களில் கூடி நிற்பதாகவும் செய்திகள் பரவின. ஒரு சில நிமிடங்களில் துப்பாக்கி ஓசை காதுகளை பிளக்கும் அளவிற்கு பிரதேசம் எங்கும் கேட்டவண்ணம் இருந்தது. அது இருதரப்பினருக்கும் மோதல் நடப்பதை உறுதிப்படுத்தக்கூடியதாக அமைந்தது. மோதல் தணிந்த நிலையில் முதலைக்குடா சந்தியை அண்மித்த படையினர் பண்ணைத் தொழிலாளர்களையும், அதனை அண்டிய பொதுமக்களையும் ஒன்று சேர்த்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை இரத்தக்கறை படியச் செய்தனர். கொக்கட்டி மரத்தில் குருதி வடிந்த அதே புனித பூமியில், நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி குடிமக்களின் குருதி ஆறாக பாய்ந்தது. பிரதேசத்தில் முதலாவது வைத்தியர் என்ற பெருமைக்குரியவரும் மருந்து மரம் என மக்களால் அழைக்கப்பட்டவருமான டொக்டர் கந்தையா உட்பட அத்தனை பேரினதும் பூதவுடல்கள் படையினரால் எடுத்துச் செல்லப்பட்டதோடு அவை எங்கே தகனம் செய்யப்பட்டன அல்லது எங்கே புதைக்கப்பட்டன என்று அறியாமலே போயிற்று. மட்டக்களப்பில் இருந்த எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து அதிகமான எரிபொருட்கள் குறிப்பிட்ட இறால் பண்ணைக்கு எடுத்து வரப்பட்டமை பாதுகாப்பு தரப்பினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது என்றும் இதன் காரணமாகவே அப்பண்ணைத் தொழிலாளர்களை இயக்க செயற்பாட்டாளர்களாக கருதி அவர்கள் கொலை செய்தனர் என்று ஒரு பகுதியினரும், பண்ணை நடவடிக்கைகளினால் உண்டான முரண்பாடும் காட்டிக் கொடுப்புமே காரணமென்று, வேறு சிலரும் பேசினாலும் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பதை இன்று வரையிலும் அப்பிரதேச மக்களின் கண்ணீர் சாட்சி கூறும். இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி 2007ம் ஆண்டு முற்பகுதியில் இடம்பெற்ற இடப்பெயர்வு நேரத்தின் போது அழுக்கு நெஞ்சங்களின் செயற்பாடு காரணமாக சேதமாக்கப்பட்டாலும் பிரதேச மக்களின் மனங்களிலிருந்து இப்படுகொலை சம்பவத்தை நினைவிலிருந்து என்றுமே அகற்ற முடியாது. இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிராத்திப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் அஞ்சலியாக அமையும்.

0 கருத்துக்கள் :