சிறீதரன் அலுவலக வெடிபொருட்கள் மீட்பு! பெரிதுபடுத்தாத யாழ். பத்திரிகைகள்!

13.1.13

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம் முற்றுகையிடப்பட்டு வெடிபொருட்கள், மற்றும் பல பொருட்கள் மீட்கப்பட்டதாக பரபரப்பான செய்திகள் அரசாங்கத்தினதும், ஈ.பி.டி.பி யினரதும் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிவரும், வடக்கை பிரதிபலிக்கும் நடுநிலை ஊடகங்களான உதயன், தினக்குரல், வலம்புரி போன்ற பத்திரிகைகள் இவ்விடயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இந்த விடயம் ஒரு திட்டமிட்ட செயல் என்பதையும் அந்த ஊடகங்களும், மக்களும் புரிந்திருக்கின்றார்கள் என்பதை இன்று காலை பத்திரிகைகள் வெளியான பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது. மக்கள் மிகவும் தெளிவாகவும், நடுநிலையில் நின்றும் இந்தப்பிரச்சினையினை பார்க்கிறார்கள். ஆனாலும் ஒரு சில ஊடகங்களினதும், ஊடகவியலாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் புலனாய்வாளர்களினதும் செயற்பாடுகளால் ஒரு பகுதி மக்கள் மத்தியில் குழப்பம் நிலவாமல் இல்லை. இந்நிலையிலேயே இந்தக் கட்டுரையினை நாம் எழுதவேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியிருக்கின்றோம். அண்மைக்காலமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் மாணவர்கள், பொதுமக்கள் திடீர் திடீரென கைதுசெய்யப்படுகின்றார்கள், அரசியல்வாதிகள் விசாரணைகளுக்காக அழைக்கப்படுகின்றார்கள். உதாரணத்திற்கு தமிழ் யுவதிகள் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணை செய்யப்பட்டார். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டது. அதன் பின்னர் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். இந்தச் சம்பவங்கள் உடனுக்குடன் ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை அரசும் அதன் இராணுவ இயந்திரமும் தனது இலக்கை குறித்துவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், அந்த இலக்கு யார் மீது வீழ்த்தப்பட்டிருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாத ஒரு மர்மமாகவே இருந்துவந்தது. ஆனால் அரசும், இராணுவமும் குறிவைத்திருந்த இலக்குகள் இரண்டு அதில் முதலாம் இலக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இரண்டாம் இலக்கு அ.வேழமாலிகிதன். இந்த இரண்டு இலக்குகளையும் வீழ்த்திவிட்டால் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அரசாங்கமும், இராணுவமும், குறுநில மன்னர் சந்திரகுமாரும் எதைவேண்டுமானாலும் செய்யலாம். ஏன்? எதற்கு? என யாரும் கேள்வியெழுப்ப மாட்டார்கள். எனவே இந்த இரண்டு இலக்குகளையும் வீழ்த்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனால் கடைசிவரைக்கும் அது சாத்தியப்படாத நிலையில் இறுதியாக அரசாங்கம் விரித்திருந்த வலையில் இரண்டாம் இலக்கு வீழ்த்தப்பட்டிருக்கின்றது. அல்லது அரசும், இராணுவமும் குறிவைத்திருந்த இலக்குகள் வலைக்குள் தாமாகவே வீழ்ந்திருக்கின்றன. அதாவது தாம் இலக்குகளாக கொள்ளப்பட்டிருக்கின்றோம் என்பது இலக்குகளுக்கு நன்கு தெரியும். எனினும் தம்மையே சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கிக் கொள்ளாமை, மற்றும் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் தொடர்பில், அவர்களுடைய செயற்பாடுகள் தொடர்பில் அலட்சியமாக இருந்தமை போன்ற காரணங்களால் அரசின் சதி வலைக்குள் இலக்கு வீழ்ந்திருக்கின்றது என்பதை தமிழ் தேசிய ஆதரவு சக்திகளுக்கு புரியப்படுத்த நினைக்கின்றோம். ஈழத்தைப் பொறுத்தவரையில் ஒரு யதார்த்தத்தை நாங்கள் மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் உணர்ந்து கொண்டாகவேண்டும். 2009ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழ் தேசிய அரசியல் மிக ஆபத்தானது. மயிர்க்கனம் இடைவெளி வீழ்ந்தால் கூட போதும் எமக்குப் பின்னால் நிற்பவனே தாறுமாறாக வெட்டிச்சாய்த்து விடுவான். அந்தளவுக்கு இன்று ஆபத்திருக்கின்றது. இந்நிலையில் அதி தீவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினரும், வேழமாலிகிதனும் தங்களுடைய பாதுகாப்பிலும், தம்மை சுற்றியிருப்பவர்கள் தொடர்பிலும் அவதானமின்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது என்பதுடன் கண்டிக்கப்பட வேண்டியதும் கூட. ஏனெனில் இது ஒரு தனிநபருடைய சுதந்திரத்திற்கான போராட்டம் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அடிக்கடி கூறுவார் காயம்பட்ட ஒரு இனத்தின் பணியை காவிச் செல்கின்றோம் கவனம் தோழர்களே..! என்று. அந்த வார்த்தைகளின் பெறுமதியை அவருடைய சகாக்கள் உணரத் தவறியமை வரலாற்றுச் சோகம். இங்கே முதலாம் இலக்காக பாராளுமன்ற உறுப்பினரைக் குறிவைத்தது நியாயம், இரண்டாம் இலக்காக அ.வேழமாலிகிதன் கொள்ளப்பட்டதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வியை பலர் எழுப்பக் கூடும். நிச்சயமாக நிறையவே காரணங்கள் இருக்கின்றன. முதலாவதும் முக்கியமானதுமான காரணம் வேழனிடம் ஆயுதம் இல்லை. ஆனால் ஆயுதத்தை விடவும் பலமான பேச்சாற்றலும், மக்களோடு மிக நெருக்கமாக பழகும் பண்பாடும் எப்போதும் இருக்கின்றது. இது ஏனையோரின் குறிப்பாக நாமல் ராஜபக்ச, சந்திரகுமார் போன்றோரின் அரசியலுக்கு மிகவும் நெருக்கடியானதாக மாறியிருந்தது. இதனால் வேழன் மீது மக்கள் நம்பிக்கையற்றுப் போகவேண்டும் என்பதற்காக, மிகவும் கீழ்த்தனமான செய்திகளை ஈ.பி.டி.பி யின் தினமுரசு பத்திரிகை இன்றல்ல, இதற்கு முன்னரும் பலதடவை எழுதியிருக்கின்றது. ஆனால் வேழனுடன் மிக நெருக்கமாக பழகியவர்களுக்கு வேழன் குறித்த உண்மைகள் நிச்சயமாகத் தெரியும், தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் புலிகளின் பணத்தில் வயிறு வளர்த்தவர்கள் இன்று, சந்திகுமாரிடமும், நாமலிடமும், இராணுவத்திடமும் நக்கி வயிறு வளர்க்கும் நிலையில் உள்ளனர். மிக நேர்மையான ஜனநாயக அரசியல் போராளியாக வலம் வந்தவன் வேழன், அவனுடைய இருப்பு தமிழ் தேசிய அரசியலின் பலம் என்பது அரசாங்கத்திற்குப் புரியும். கிளிநொச்சி மாவட்டத்துடன் மட்டும் நின்றுவிடாமல், வடக்கு கிழக்கு முழுவதும் தன் அகலக்காலை பதித்த வேழன், சாதாரண தனிமனிதன் அல்ல. காயம்பட்ட இந்த இனத்தின் பணியை காவிச் செல்வதற்காகவே உருவானவன், அந்தப்ப ணியை மிக நெருக்குவாரமான காலத்திலும், சூழலிலும் கூட உன்மையான இன உணர்வோடு செய்தவன் என்பதை அவனோடு வாழ்ந்தவன் என்பதனால் நானறிவேன். இன்று வேழன் கைதுசெய்யப்பட்டிருக்கின்றமைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள், ஈழத்திலுள்ள தமிழர்கள் குரல் கொடுக்கவேண்டும். வேழனுடைய கைது தமிழ் தேசிய இனத்தின் குரல்வளை நசுக்கப்பட்டதற்குச் சமம், இவ்விடயத்தில் நாம் தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என்பதை நாங்கள் இப்போதாவது புரிந்துகொள்ளவேண்டும். - பொம்மி - karu.bomi@gmail.com

0 கருத்துக்கள் :