இயல்பு நிலைக்குத் திரும்பாத தமிழீழம்..!

7.1.13


இராணுவ ஆட்சியில் தமிழீழ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு கூறமுடியும். அவற்றுள் மிகக் கொடூரமானது பரவலாகக் காணப்படும் வறுமை. வடக்கு கிழக்கில் வாழும் மொத்த மக்கள் தொகையில் அரைவாசிப் பங்கினர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். வேலை வாய்ப்புக்கள் அருகி விட்டன. இருக்கின்ற வேலை வாய்ப்புக்களும் பெரும்பான்மை இனத்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. வறுமையின் கொடூரத்தை ஆண்களிலும் பார்க்கக் கூடுதலாகப் பெண்கள் அனுபவிக்கின்றனர். கணவனை இழந்த இளவயதுப் பெண்களுக்கான உதவிப் பணிகள் முன்னெடுக்கப் படவில்லை. இந்த இளம் விதவைகள் தமது பிள்ளைகளைப் பராமரிப்பதில் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். பிள்ளைகளுடைய கல்வி வசதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒரு தலைமுறை சீரழிவதைக் காண்கிறோம். போரின் மிகப் பெரிய பாதிப்பாக சமூகத்தின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் மத்தியதர வர்க்கம் முற்றாக மறைந்து விட்டது. செல்வந்தர்கள் என்று சொல்வதற்கு யாருமில்லை. சமுதாயத்தின் அடித்தளமாக விளங்கிய விவசாயப் பெருமக்கள் பழைய கதையாகி விட்டனர். விவசாயம் மூலம் பொருளீட்ட முடியாத நிலை வடக்கிலும் கிழக்கிலும் ஒரே சீராகக் காணப்படுகிறது. மெல்லக் கொல்லும் நோய் என்று வர்ணிக்கப்படும் போஷாக்கின்மை சிறுவர்களைக் கடுமையாகப் பாதிக்கின்றது. நல்வாழ்வுத்துறை இது பற்றி அக்கறை எடுப்பதில்லை. நிர்வாகச் சீர்கேடும் அக்கறை இன்மையும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. இனப் பற்றுள்ள தமிழ் முஸ்லிம் அதிகாரிகளால் சுயமாக இயங்க முடியவில்லை. இராணுவ ஆளுநர்களின் கெடுபிடி இதற்குக் காரணம். வடக்கு கிழக்கு நிர்வாகத்தில் சிங்கள ஆளுநர்களின் தலையீடு காரணமாக அதிகாரிகள் கடும் விரக்தி அடைந்துள்ளனர். வடக்கு கிழக்கில் சென்ற மாதம் கொட்டிய கடும் மழையும், காற்றும் வெள்ளப் பெருக்கும் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கியது. மட்டகளப்பு மக்களா, வன்னி மக்களா கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல. எல்லோருமே அல்லல் படுகின்றனர் என்பதே யதார்த்தம். அரசு ஒரு வகைப் பொருளாதாரப் போரைத் தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. மொத்த வியாபாரம் தொடக்கம் சில்லறை வணிகம் வரை வடக்கு கிழக்கில் சிங்கள வர்த்தகர்களின் பிடிக்குள் சென்றுள்ளன. அரசும் இராணுவமும் இதற்கு ஊக்குவிப்பு வழங்குகின்றன. சிகை அலங்கார நிலையங்கள், மரக்கறி, கோழி, மீன் வியாபாரங்கள் அனைத்தும் சிங்களவர் கைகளுக்கு மாறிவிட்டன. தமிழர்கள் எடுபிடிகளாக மாறிவிட்டனர். இராணுவக் கெடுபிடிகளை நியாயப் படுத்துவதற்காக புலிகள் வந்து விட்டார்கள். தாக்குதல் திட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்தத் தயாரகி விட்டார்கள் என்ற புரளி அரச சார்புப் பத்திரிகைகள் வாயிலாகவும் வதந்திகள் மூலமாகவும் பரப்பப் படுகின்றன. வடக்கு கிழக்கு மக்களுக்கு நிம்மதியும் இயல்பு நிலையும் சுபீட்சமான நிகழ் காலமும் எட்டாக் கனியாக இருக்கின்றன.

0 கருத்துக்கள் :