கிளிநொச்சி பகுதி வீதிகளில் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள்

5.1.13


கிளிநொச்சி நகரப் பகுதிக்கு வரும் பெண்கள் அங்கு நிற்கும் சிலரால் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பஸ் நிலையம், நகர வீதிகள் ஆகிய இடங்களில் காணப்படும் பெண்களிடமே சிலர் தமது சேஷ்டைகளை விடுவதோடு கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் தனியார் கல்வி நிலையத்துக்குச் சென்று விட்டு மாலை நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவிகள் சிலரைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் அவர்களை கீழ்த்தரமாக நடத்தியுள்ளனர். அவர்கள் சென்ற துவிச்சக்கர வண்டிகள் மறிக்கப்பட்டதுடன் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த மாணவிகளைத் தம்முடன் வருமாறும் இவர்கள் கேட்டுள்ளனர். அப்போது அந்த வீதி வழியாக யாரோ வருவதை அவதானித்த அந்த இளைஞர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் வீடு வந்து சேர்ந்ததாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது. இதேபோல கிளிநொச்சி பஸ் நிலையப் பகுதியிலும் இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் செல்லும் போது பின் தொடர்ந்து செல்லும் சிலர் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பிரயோகித்து சேஷ்டை புரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கிளிநொச்சியில் சட்ட விரோத மதுப் பாவனையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் மாலையானதும் வயது, உறவு, தகுதி வேறுபாடின்றி பலரும் மது போதையில் தள்ளாடுவதையும், வீதியால் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவதையும் அசிங்கமான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவதனையும் அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :