நல்லூர் கந்தன் பாதுகாப்புக்கு இராணுவத்தை அழைத்தது ஆலய நிர்வாகியாம்!

8.1.13


நல்லூர் ஆலய வளாகத்தில் இராணுவக் காவரலண் அமைக்கப் பட்டமைக்கு ஆலய நிர்வாகி விடுத்த வேண்டுகோளே காரணம் என்று தெரியவருகின்றது. போர்க் காலங்களில்கூட இல்லாத வகையில் திடீரென நல்லூர் முருகன் ஆலயத்தின் அருகில் இராணுவக் காவலரன் நிறுவப்பட்டது. இதற்கு பக்தர்கள் தரப்பில் இருந்தும் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் எதிர்ப்பை அடுத்து இராணுவக் காவலரண் முதலில் இருந்த இடத்திற்கு எதிரே இடம்மாற்றப்பட்டது. ஆனால் அகற்றப்படவில்லை. களவு மற்றும் கோயிலின் சுவர் வழியாக ஆட்கள் உள்ளே ஏறிக் குதிக்கிறார்கள் என்ற காரணங்களுக்காக இராணுவப் பாதுகாப்புப் போடுமாறு ஆலய நிர்வாகி விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே அங்கு காவலரண் அமைக்கப்பட்டதாக யாழ். இராணுவ கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது. ஆலய நிர்வாகியும் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஆலயத்திற்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் காவல்துறையினரிடமே பாதுகாப்பு கோரியிருக்க வேண்டும். இராணுவத்தினரிடம் பாதுகாப்பு கோரியது சமய விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் இராணுவ தலையீட்டை அதிகரிக்க வழியேற்படுத்தி கொடுக்கும் என பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்கப்பட்ட போதிலும் ஆலய நிர்வாகி இராணுவத்தினரிடமே பாதுகாப்பு கோரியுள்ளார். நல்லூர் ஆலயம் தனியொரு முதலாளியின் கைகளிலேயே இருந்து வருகின்றது. மாப்பாண முதலி பரம்பரையினர் அதனை தொடர்ந்து வழிநடத்தி வருகின்றனர். விடுதலைப் புலிகளின் காலத்தில் ஏனைய பல கோயில்கள் தனிநபர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்து பொது நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டன. ஆனால், நல்லூர் ஆலயத்தின் தொன்மை மற்றும் பாரம்பரியம் கருதி தொடர்ந்தும் தனிநிர்வாகத்தின் கீழேயே வைக்கப்பட்டிருந்தது. ஆனால் நல்லூர் ஆலயத்திற்கு சொந்தமான தனிநபர்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களின் கைப்பொம்மைகளாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆசி வழங்குபவர்களாகவுமே இருந்து வருகின்றனர் என யாழ். பொதுமக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :