கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் குறித்து ஜெயலலிதா

31.1.13

விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், ஜெயா டி.வி.க்கு விஸ்வரூப திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமை வழங்கப்படாதது தான் காரணம் என ஒரு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. எனக்கும் கமலுக்கும் என்ன பிரச்னை இருக்கிறது. நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை. படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறப்பட்டு வருகிறது, ஆனால் அது தவறான கருத்து மாநில அரசுக்கு படத்தை தடை செய்ய சட்டத்தில் அதிகாரம் இருக்கிறது. கமல்ஹாசன் திரைப்படத்திற்கு பெரிய அளவில் முதலீடு செய்திருப்பதாக நேற்று பேட்டியளித்திருந்தார். அவர் முதலீடு செய்ததற்கு அரசு பொறுப்பேற்க முடியாது. தமிழகத்தில் மட்டும் விஸ்வரூபம் தடை செய்யப்படவில்லை, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கெல்லாம் என்ன, எனது ஆட்சியாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன்- இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் செய்து கொள்ளட்டும்: எனவே தடைக்கு நான் மட்டுமே காரணம் என சொல்வது அர்த்தமற்றது. இந்தச் சூழலில், நடிகர் கமல்ஹாசன் சில காட்சிகளை நீக்க முன் வந்திருக்கிறார். அவ்வாறு காட்சிகள் நீக்கப்பட்டால் இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே இஸ்லாமிய அமைப்புகளும்- கமல்ஹாசனும் கூட்டாக ஆலோசித்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும் பட்சத்தில், படத்தை திரையிட என்ன மாதிரியான உதவிகளை செய்ய வேண்டுமோ அதை கண்டிப்பாக அரசு நிறைவேற்றும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. கடந்த சில தினங்களாக சில ஊடகங்களில் பூதாகரமாக விஸ்வரூபம் குறித்து பேசப்பட்டு வருகிறது. நிறைய கருத்துக்கள், விவாதங்கள் நடந்து வருகின்றன. பிரச்சனையின் ஆழம் அறியாமல் நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நான் அனைவரது முன்னரும் விளக்கம் அளிக்க வேண்டும் என நினைத்தேன். திரையரங்குகளில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் திரைப்படத்தை தடை செய்யக் கூடாது என்றும் தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் 524 திரையரங்குளிலும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது என்பது சாத்தியமில்லை. அனைத்து திரையரங்குகளிலும் பாதுகாப்பு அளிக்க 56,440 காவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். அது நடைமுறையில் சாத்தியமில்லை. இவ்வாறு கூறினார்.

0 கருத்துக்கள் :