கேரளாவில் பரபரப்பு : பாலியல் புகாருக்கு ஆளான சப்&இன்ஸ்பெக்டர் தற்கொலை

8.1.13

கேரள மாநிலம் மாவேலிக்கரையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு விடுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து மாவேலிக்கரை சப்&இன்ஸ்பெக்டர் டேம்மியன் தலைமையிலான போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் 2 சிறுமிகள் உட்பட 7 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 2 சிறுமிகள் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள மாவோயிஸ்ட் தீவிரவாதி தம்பதிகளான ரூகேஷ், ஷைனா ஆகியோரின் மகள்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 7 பேரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை கைது செய்த சப்&இன்ஸ்பெக்டர் டேம்மியன் மற்றும் போலீசாருக்கு போனில் கொலை மிரட்டல் வந்ததாக கூறப் படுகிறது. இதற்கிடையே கைதான 2 சிறுமிகளும் கடந்த சில தினங் களுக்கு முன் தங்களை சப்&இன்ஸ்பெக்டர் டேம்மியன் தலைமையிலான போலீசார் கொடுமைப்படுத்தியதாகவும், தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறினர். இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் டேம்மியனை போலீஸ் உயர்அதிகாரிகள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு டேம்மியன் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். நேற்று காலை அவரது மனைவி ஷெர்ளி எழுந்து பார்த்த போது படுக்கையில் டேம்மியனை காணவில்லை. வீட்டின் அருகே உள்ள மரத்தில் டேம்மியன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு மாவேலிக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்கொலை செய்து கொண்ட சப்&இன்ஸ்பெக்டர் டேம்மியன் யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார் என்றும், அவர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :