போர்க்காயங்களை உல்லாச சுற்றுலா மையமாக்கி மகிழும் சிறிலங்கா

7.1.13


சிறிலங்காவின் 'கொலைக்களங்களில்' கட்டப்படும் 'மனதிற்கு மகிழ்வைத் தராத' சுற்றுலா விடுதி தொடர்பில் மனித உரிமைக் குழு ஒன்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சிறிலங்காவின் வடக்கு கரையோரத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் நீரேரியில் 2009ல் தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரச படைகள் தமது கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். பல பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா கருதும் அதே இடத்தில் தற்போது சிறிலங்க இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் விடுமுறை விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு விடுதி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரான பாதுகாப்புச் செயலராலும் திறந்து வைக்கப்பட்டது. "உங்களது விடுமுறையை மனதிற்கு இதமாக களியுங்கள். நந்திக்கடல் நீரேரியின் குளிர்ச்சியான தென்றல் காற்றை சுவாசியுங்கள்" என நந்திக்கடல் நீரேரியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள விடுதியின் முகப்புப் புத்தகத்தின் பக்கத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று படுக்கையறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியின் சுவர்களில் உள்நாட்டுப் போரின் நினைவுச்சின்னங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. நந்திக் கடல்நீரேரியில் "பல ஆயிரக்கணக்கான யுத்த வீரர்களும், பயங்கரவாதிகளும் ஏனையோரும் மரணித்துள்ளனர்" என சிங்கள மொழி மூலப் பத்திரிகை ஒன்றில் இந்த விடுதி அமைந்துள்ள இடம்தொடர்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "போர் சுற்றுலாத்துறை என்பது நடந்து முடிந்த யுத்தம் பற்றி பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்வதாகும். எடுத்துக்காட்டாக, கம்போடியாவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் கொலைக்களங்கள் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைச் சரியாகச் செய்தால், இது பாதிக்கப்பட்டவர்களின் மனவடுவை ஆற்றும். ஆனால் சிறிலங்காவின் கொலைக்களங்களில் அமைக்கப்படும் போர்ச் சுற்றுலாத்துறையில் போரில் வெற்றி கொண்ட சிறிலங்கா இராணுவத்தினர் மட்டுமே காட்சிப்படுத்தப்படுகின்றனர்" என சிறிலங்காவில் அமைதி மற்றும் நீதிக்கான பரப்புரையில் ஈடுபடும் பிரெட் காவர் தெரிவித்துள்ளார். "சிறிலங்காவின் கொலைக் களங்களில் 'நாங்கள் பிரபாகரனைக் [தமிழ்ப் புலிகளின் தலைவர்] கொலைசெய்த இடத்தை வந்து பாருங்கள்' எனக் கூறப்பட்டுள்ளதே தவிர இங்கு உயிர்களை நீத்த பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக எவ்வித தகவல்களும் குறிப்பிடப்படவில்லை என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்" எனவும் பிரெட் காவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :