புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் தான் சிறிலங்காவுக்கு இத்தனை எதிரிகள் – விமல் வீரவன்ச

18.1.13


“சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இடம்பெறும் எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் ஒரே காரணம் விடுதலைப் புலிகளை அழித்தது தான்.” இவ்வாறு கூறியுள்ளார் சிறிலங்காவின் வீடமைப்பு மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச. ‘போர் மற்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குப் பின்னர் சிறிலங்கா‘ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “பல்வேறு வடிவங்களில் சிறிலங்காவுக்கு எதிரான வெளிநாட்டுச் சதிகள் இடம்பெறுகின்றன. புலம்பெயர் தமிழர்களும், குறிப்பிட்ட மேற்கு நாடுகளும் சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்புகின்றன. போர்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த, சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானத்துக்கு ஆதரவு திரட்ட சர்வதேச சமூகத்துக்கு சிறிலங்காவை மோசமான நாடாக சித்திரிக்க இவர்கள் முனைகின்றனர். பல்வேறு நபர்களைப் பயன்படுத்தி, சிறிலங்காவில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கு நாடுகளும், தேசப்பற்றில்லாத சிறிலங்கர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சில அரசுசாரா நிறுவனங்களும் முயற்சிக்கின்றன. முதலில் இவர்கள் தமது தேவைக்காக முன்னாள் இராணுவத் தளபதியைப் பயன்படுத்திக் கொண்டனர். சிறிலங்கா அதிபருக்கும், ஆயுதப்படைகளுக்கும் இடையில் மோதலை உருவாக்குவதன் மூலம் இவர்களால் சில நன்மைகளைப் பெற முடியும். அதன் பின்னர், அவர்கள் தலைமை நீதியரசரைப் பயன்படுத்தி, நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் மோதலை உருவாக்கினர். அந்தப் பாத்திரம் (நபர்) முக்கியமல்ல. இந்தச் சம்பவங்களின் பின்னால் உள்ள உண்மையான நோக்கங்களை சிறிலங்கர்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சிறிலங்காவைப் போன்றே, பிலிப்பைன்சும் தலைமை நீதிபதியை பதவிநீக்கம் செய்துள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸ் அரசுக்கு எதிராக ஐ.நாவின் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அமெரிக்கா இதுபற்றி இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஒரே விடயத்தில் எம்மை மட்டும் அவர்கள் ஏன் வித்தியாசமாக நடத்துகிறார்கள். இந்த எல்லா வெளிநாட்டுத் தலையீடுகளுக்கும் காரணம் என்னவென்றால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது தான். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்ட போதிலும், நாம் உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளைக் கொண்டுள்ளோம். எல்லா சிறிலங்கர்களும் இந்த எதிரிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த எதிரிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா அரசுக்கு ஆதரவு தரவேண்டும்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 கருத்துக்கள் :