வடக்கு கிழக்கில் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர் தொகை அதிகரிப்பு

17.1.13

இலங்கைவின் வடக்கு கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட அதிகளவான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2011ல் இலங்கைத் தீவு முழுமையும் 126,000 வரையான மாணவர்கள் தமது பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகியதாக மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு இடைவிலகிய மாணவர்களில் அதிகம் பேர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2011ல் இலங்கைவின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 38,321 மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேபோன்று பாடசாலையை விட்டு விலகிய கிழக்கு மாகாண மாணவர்களின் எண்ணிக்கையானது இரண்டாவது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 24,614 மாணவர்கள் 2011ல் கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைவில் இலவச கல்வி முறை நடைமுறையிலுள்ள போதிலும், இவ்வாறு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவாதானது அதிர்ச்சி தருவதாக சிறுவர் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் நிலவும் வறுமை காரணமாக பாடசாலை மாணவர்கள் தமது கல்வியை பாதியில் நிறுத்துவதாக ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வறுமையில் வாடும் சிறார்கள், தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன் இவ்விரு மாகாணங்களிலும் போதியளவு ஆசிரியர்கள் காணப்படவில்லை. கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்னமும் நிறைவு செய்யப்படவில்லை. இவ்வாறான காரணங்களால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான மாணவர் விலகலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதிலும் தொடர்ந்தும் மாணவர்கள் இடைவிலகும் நிலை அதிகரித்துச் செல்வதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

0 கருத்துக்கள் :