புலிகள் மீண்டும் தலைதூக்குவதாக அரசு சொல்வதில் உண்மையில்லை;ஆனந்தசங்கரி

31.12.12


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதாக அரசு கூறுவதில் எள்ளவும் உண்மையில்லை. இவ்வாறு தவறான கருத்தை உருவாக்கி அதன்மூலம் திரும்பவும் இருண்ட வாழ்வுக்குள் தமிழர்களை தள்ளுவதை அரசு நிறுத்த வேண்டும். அத்தோடு பல் கலைக்கழக மாணவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். தன்னுடைய இராணுவத்தின் இருப்பைத்தக்க வைப்பதற்காக அரசுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் மாணவர்கள் இறங்காதவாறு அவர்களுடன் தொடர்புடையவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்தார் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி.தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த பொதுச் சபை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அவை வருமாறு: கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் தான்தோன் றித்தனமாக முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதனை அவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கட்சி வலுவடைய வேண்டுமெனில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தாம் எடுக்கும் முடிவுகள் தங்கள் கட்சியை சார்ந்ததா அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிறுபான்மை இனத்தவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, வன்முறையின்றி பேச்_வார்த்தை மூலமும், இணக்கப்பாட்டுடனும், சமாதானமாகவும் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அரசு அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வர வேண்டும்.தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் மக்களுடன் மட்டுமல்லாது ஏனைய இன மக்களுடனும், பல்வேறு இன, மத குழுக்களுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது. இலங்கை வாழ் அனைத்து மக்களையும் சமாதானத்துடனும், ஜனநாயக மனிதாபிமான அடிப்படையில் உரிமைகளை அநுபவிக்க உத்தரவாதமளிக்க வேண்டுமென்றும் அரசை வலியுறுத்துகின்றது. விடுதலைப் புலிகள் தலைதூக்குகிறார்கள் என்ற அரசின் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறு தெரிவித்து மக்களைத் தொந்தரவு செய்து மீண்டும் இருண்ட வாழ்வுக்குள் செல்வதற்குரிய வழிமுறைகளை ஏற்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியமில்லை. மாணவர்கள் தம்மைத் தாமே கவனித்துக் கொள்ளக்கூடிய தகுதியுடையவர்கள். மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட எவரும் அர_ இராணுவத்தை தொடர்ந்து வைத்திருக்கவும், நியாயப்படுத்தவும், வாய்ப்பளிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஒற்றையாட்சியின் கீழ் ஒருபோதும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அதிகாரப் பகிர்வின் மூலமே நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும். இந்தக் கருத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுதியாக உள்ளது. என்பன போன்ற விடயங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

0 கருத்துக்கள் :