நிலங்களை அபகரிக்கலாம், தமிழர் மனங்களை அபகரிக்க முடியாது .

18.12.12


வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" என்கிறார் யாழ்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற்துறை பேராசிரியர் ஒருவர். சண்டேலீடர் ஆங்கில வாரஇதழில் நிரஞ்சல்லா ஆரியசிங்கவும், கிரிசாந்தி கிறிஸ்தோப்பரும் இணைந்து எழுதியுள்ள செய்திக்கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு இன்னமும் திரும்பிச் செல்லமுடியாத நிலையில் வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளது.
 யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 84,000 மக்களும், திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 6000 மக்களும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாது தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர, சிறிலங்காவிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாகச் சென்றவர்களில் 150,000 பேர் இன்னமும் அங்குள்ள அகதி முகாம்களில் வாழ்வதாகவும், இவர்கள் சிறிலங்காவுக்கு திரும்பி வருவதில் விருப்பங் கொண்டிருந்தாலும் கூட அடிப்படை வசதிகளைக் கூட நிறைவேற்ற முடியாத வெற்றுக் காணிகளில் இவர்கள் குடியேற்றப்படுவதற்கான அனுமதி கூட மறுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இந்திய அகதி முகாங்களில் வாழ்வதாகவும் சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்கள் என்று எவரும் இல்லை என இந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்தும் அறிவிக்கின்றது.
கடந்த ஒக்ரோபரில் இறுதி இடம்பெயர்ந்த முகாமும் மூடப்பட்டு விட்டதாகவும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் மிகப் பாதுகாப்பாக மீள்குடியேற்றப்பட்டதாகவும் இந்நாட்டு அரசாங்கம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டு சிலவாரங்களில் இந்த 'மீள்குடியேற்றம்' தொடர்பான உண்மை என்ன என்பதை ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.
 கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீள்குடியேற்ற விடயம் முற்றுமுழுதாக பூர்த்தியாக்கப்பட்டு விட்டதாக கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. இதற்காகவே தனது நாட்டில் எந்தவொரு இடம்பெயர்ந்தவர்களும் இல்லை எனவும் அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் பொய்யான பரப்புரையை மேற்கொண்டிருந்தது. இதன் காரணமாகவே மெனிக் பாம் முகாமில் இறுதியாக எஞ்சியிருந்த 6000 வரையான மக்களை சீனியமோட்டை என்கின்ற காட்டுப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக குடியேற்றியது.
இதன் மூலம் அனைத்துலக சமூகத்தை நம்பவைக்க முடியும் என சிறிலங்கா அரசாங்கம் கருதியது. அனைத்துலக சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கமானது அவசர அவசரமாக மெனிக்பாம் முகாமை மூடிவிட்டு அங்கிருந்த மக்களை சீனியமோட்டை என்ற காட்டுப் பகுதியில் குடியேற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
 "இந்த மக்கள் தாம் தற்போது தங்கியிருக்கும் சீனியமோட்டை காட்டுப் பகுதியிலிருந்து ஒரு கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்திலுள்ள தமது சொந்தக் காணிகளில் எப்போது மீள்குடியேற்றப்படுவோம் என காத்திருக்கின்றனர். யுத்தத்தின் விளைவால் உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தொடர்ந்தும் பல்வேறு துன்பங்களைச் சந்திக்க வேண்டிய நிலையில் வாழ்கின்றனர். மீள்குடியேற்றம் என்பது வெறுங் காடுகளில் இறக்கிவிடுவதைக் குறிக்கின்றதா?" எனவும் சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். "வடக்கில் எந்தவொரு இடம்பெயர்ந்தோர் முகாம்களும் காணப்படவில்லை என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் வாதமாகும். ஆனால் யாழ்ப்பாணத்தில் தற்காலிக இடைத்தங்கல் முகாங்களும் நலன்புரி நிலையங்களும் காணப்படுகின்றன.
இவற்றைசிறிலங்கா அரசாங்கம் 1996ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறது. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் இந்த முகாங்களில் வாழ்கின்றனர்" எனவும் சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். "சிறிலங்காவின் வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கை முடிவடைந்து விட்டதாகசிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இது முற்றிலும் பொய்யானதகவலாகும். யாழ்ப்பாணத்தில் 26 ஆண்டுகால பழமை வாய்ந்த 11 நலன்புரி நிலையங்கள் காணப்படுகின்றன. இந்த முகாங்களில் தற்போது நூறாயிரம் மக்கள் வரை வாழ்கின்றனர். இவற்றை சிறிலங்கா அரசாங்கமே நிர்வகிக்கின்றன. ஆனால்இவற்றை அரசாங்கம் வெளியில் தெரிவிக்கவில்லை.
'மீள்குடியேற்றப்பட்ட' மக்கள் பலர் இன்னமும் தமது உறவுகளினதும் நண்பர்களினதும் வீடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் ஒன்றுக்கும் பயன்படாத வெற்றுக் காணிகளில் வாழ்வதற்கான அனுமதி கூட வழங்கப்படாத நிலையில் இவ்வாறு வாழ்கின்றனர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிறிதொரு நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 சிறிலங்கா அரசாங்கம் காலத்திற்கு காலம் இடம்பெயர்ந்தோர் முகாம்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் வெளியுலகில் இவ்வாறான எதுவும் இல்லை என்பதை நம்ப வைக்க முயல்வதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 "யாழ்ப்பாணத்தில் 24 கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் குடியேற்றப்படவில்லை. இவற்றை சிறிலங்கா இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இங்கு மக்கள் குடியேற்ற அனுமதிக்கப்படவில்லை. இக்கிராமசேவைப் பிரிவுகள் இராணுவத்தாலோ அல்லது சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி, முல்லைத்தீவுமாவட்டங்களிலும் இத்தகைய பிரச்சினை நிலவுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து நிர்க்கதியான நிலையில் உள்ளபோதிலும் இவர்கள் தமக்கான வாழ்விடத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது துன்பப்படுகின்றனர்" எனவும் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 கிளிநொச்சியிலுள்ள பரவிப்பாஞ்சன் எனும் கிராமத்தில் முன்னர் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகம் காணப்பட்டது. பொதுமக்கள் இங்கு செல்வதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படவில்லை. விடுதலைப் புலிகளின் முகாமுக்கு பதிலாக தற்போது இராணுவ முகாம் காணப்படுகிறது. இதனால் மீண்டும் மக்கள் அங்கு வாழமுடியாத நிலையிலுள்ளனர்.
மன்னாரிலுள்ள முள்ளிக்குளம் கிராமத்தில் 100 வரையான மீனவ மற்றும் விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்தனர். ஆனால் தற்போது இராணுவத்தினர் இந்தக் கிராமம் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்த மக்களை வேறிடங்களில் குடியேறுமாறு இராணுவத்தினர் பணித்தனர். இந்நிலையில் தற்போது இந்த மக்கள் குடியேற்றப்பட்ட இடத்தில் தமது பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்ள முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
 இடம்பெயர்ந்த 200,000 மக்களும் மீள்குடியேற்றப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் இந்தப் புள்ளிவிபரத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 "இந்த புள்ளிவிபரங்களை சிறிலங்கா அரசாங்கம் தயாரிக்கின்றது. இதனால் இவற்றை நாம் முற்றுமுழுதாக நம்ப முடியாது. எந்தவொரு இடத்திலும் எந்தவொரு புள்ளிவிபரத்தையும் நூறு வீதம் உண்மைத் தன்மையுடன் தயாரித்துக் கொள்ள முடியாது. சிறிலங்காவில் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளபோதிலும், மக்களின்மீள்குடியேற்றத்தை சிறிலங்கா இராணுவத்தினரே மேற்கொள்கின்றனர்" என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் றுவான் வணிகசூரிய மறுத்துள்ளார். "நாங்கள் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதாக த.தே.கூ கருதுகிறது. மீள்குடியேற்றமானது மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்நடவடிக்கையில் எமது உதவியையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோருமிடத்தே நாங்கள் இவ்வாறானசெயற்பாடுகளில் தலையீடு செய்கிறோம்" என பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், 1996ல் பலாலி விமானப் படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகளுக்குச் சொந்தமான 84,000 மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து துரத்தப்பட்டனர். இவர்கள் சார்பாக 2003ல் சுமந்திரன் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ஒன்றைச் செய்திருந்தார். நீதிமன்றக் கட்டளையின் படி,இந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் சிலர் படிப்படியாக அவர்களது இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் இந்தப் பகுதியைச் சேர்ந்த 28,270 வரையான குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளுக்கு செல்லமுடியாது வாழ்கின்றனர். "நீதிமன்றில் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பலாலி விமானப் படை முகாம் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் தொடர்பான விபரம் சரியாக காணப்பட்டது. ஆனால் இந்தக் காணிகளில் சிறிலங்கா இராணுவத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தது. இது போன்ற தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு சுவீகரிக்க முடியும்?" எனவும் சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 "பலாலியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு 33 மில்லியன் ரூபாக்களை செலவிடவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அந்த நேரத்தில் அறிவித்திருந்தது. இவ்வாறான பெருந்தொகை நிதியை சிறிலங்கா அரசாங்கம் ஏன் செலவிட வேண்டும்?இந்த மக்கள் அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதை அனுமதித்திருந்தால் சிறிலங்கா அரசாங்கம் 33 மில்லியன் ரூபாக்களை சேமித்திருக்க முடியாதா?" எனவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இவ்வாண்டு ஜனவரி மாதத்திலிருந்து சிறிலங்கா இராணும் பலாலி விமானப்படை முகாமைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்படுகின்றன. இது தொடர்பாக நாம் சட்டமா அதிபரிடம் வினவிய போது இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினார். நாங்கள் இதன் ஒளிப்படங்களை அவரிடம் காண்பித்தோம். ஆனால் இதற்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை. பலாலி போன்று வடக்கு, கிழக்கில் பெருமளவான நிலங்களை சிறிலங்கா இராணுவம் சுவீகரித்துள்ளது. இராணுவம் காணிகளை சுவீகரிக்கும் போது இது போன்று பொதுமக்களும் ஏன் காணிகளை சுவீகரிக்கக் கூடாது?" என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதேவேளையில், போரின் பாதிப்பால் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி புத்தளம், கொழும்பு, அனுராதபுரம், பனாந்துறை போன்ற இடங்களில் வாழ்ந்த மக்கள் அண்மையில் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய மக்கள் அழிவடைந்த தமது நிலங்களில் தமக்கான புதுவாழ்வை ஆரம்பிப்பதில் பெரும் பிரயத்தனப்படுவதாக சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசின் ஹசன் அலி குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த போதிலும், வடக்கு கிழக்கில் 150,000 இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதன் காரணம் என்ன?
 யுத்தம் உண்மையில் முடிவடைந்திருந்தால் வடக்கில் வாழும் மூன்று பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினன் நிறுத்தப்பட்டுள்ளதன் காரணம் என்ன?
 இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறது. 'புனிதமான' அரசாங்கம் தமிழ் மக்களின் பாதுகாப்பில் இவ்வளவு அக்கறை காட்டுவதன் இரகசியம் என்ன?
 சிங்கள மக்களுக்கு வழங்காத இவ்வாறானதொரு சலுகையை சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டும் காட்டுவதன் காரணம் என்ன?
 "யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து மீள்குடியேற்றம் வரை சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் மோசடியை மட்டுமே செய்கிறது" என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற் துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 "வடக்கில் வாழும் ஒவ்வொரு தமிழ் மகனும் காலையில் எழும்போது சிறிலங்கா இராணுவத்தினனை அல்லது அவனது துப்பாக்கியிலேயே விழிக்கின்றான்.
 வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 கருத்துக்கள் :