உறங்கிக் கிடந்த விடுதலை உணர்வை சீண்டிப் பார்க்கும் விசப் பரீட்சை மாணவர்கள் மீதான தாக்குதல்!

1.12.12


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் உறங்கிக் கிடக்கும் விடுதலை உணர்வாளர்களை சீண்டிப் பார்க்கும் விசப்பரீட்சையாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபைத் உபதவிசாளரும், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இளைஞர் அணித் தலைவருமான எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ம் ஆண்டு போரின் போது தமிழ் மக்கள் மிகக் கொடுமையான வாழ்வியல் பின்னடைவுகளை சந்தித்திருக்கின்றார்கள். அதிலிருந்து மீண்டெழும் வகையில் அமைதியை விரும்பும் நல்லிணக்கத்தை நாடும் விடுதலை விரும்பிகளுக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கருதவேண்டியுள்ளது. போரின் போது தமது சகோதர சகோதரிகளையும் ஒன்றாகப் படித்த நண்பர்களையும் விடுதலைக்கான வித்துக்களாக விதைத்துவிட்ட கனதியான மனதோடு, அவர்கள் கனவுகளை காத்திரமாகச் சுமந்த வாழும் எமது தமிழ் உறவுகள் வரலாறான தமது உறவுகளை நினைத்தேத்தும் கடனுக்கு குறுக்கே எந்தத் தடை வரினும் அதனை எதிர்க்க அவர்கள் தயாராகவே இருக்கின்றார்கள். அதிலும் எங்கள் சமூக நீதியின் குரலான பல்கலைக்கழக மாணவர் சமூகம், தமிழ் தேசியத்தின்பால் எல்லைகள் அற்ற பற்றுறுதி கொண்டவர்கள். அடக்குமுறைக்கு எதிராக துணிந்தெழுந்து குரல் கொடுத்தவர்கள். அதனால் கடந்த காலங்களில் பல பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையும் கடத்தப்பட்டு, காணாமற் போனமையும் கைது செய்யப்பட்டு சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டமையும் நாம் இலகுவில் மறந்துவிடும் விடயங்கள் அல்ல. என்றும் எமது விடுதலைப் போராட்டத்தின் உந்து சத்தியாகத் திகழம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை சீண்டிப்பார்ப்பது என்பது அமைதியான இலங்கையை காணவிழையும் அத்தனை பேருடைய எண்ணங்களுக்கும் பொருத்தமற்றதாகவே இருக்கும். முள்ளிவாய்க்கால் பேரவலம் எனும் உலகப் பேரலவலத்தை தாண்டி வந்த இனம் இனியொரு முறை அதைவிட கொடுமையான பேரவலத்தை காணப்போவது கிடையாது. அந்த அவலம் எங்கள் மனங்களில் அச்சத்தைத் தரவில்லை.மாறாக அச்சாமையையும் நெஞ்சுறுதியையும் விடுதலை வேட்கையையும் இன்னும் பல மடங்;காக எங்கள் மனங்களில் விதைத்திருக்கின்றது. அத்தகைய வேணவாக்கொண்ட மாணவர் சமூகத்தையும் அவர்களோடு இணைந்து செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தாக்க முனைவது வலிந்து இன்னொhரு வன்முறைக்கான தேர்வை தமிழர்களிடம் திணிப்பதற்கான முயற்சியே ஆகும். தமிழர்களின் பிரச்சனை தொடர்பில் சுருங்கிக் கிடந்த உலகத்தின் சிந்தனை வட்டம் சற்று விரிந்து பரவ ஆரம்பித்திருக்கும் கணங்களில் எமது மாணவர்களின் எழுச்சியும் அடக்குமுறைக்கு எதிரான துடிப்பும் உலகத்துக்கு பல உள்ளார்நத செய்திகளை சொல்லி நிற்கின்றது. உலகம் எமது பக்கம் உள்ள நியாயத்தின் ஆழத்தையும் இலங்கையில் தமிழர்களின் நிலையையும் இன்னொரு தடவை அதிக கவனம் கொடுத்து பார்க்க வேண்டிய கடப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான சந்தர்ப்பத்தை எற்படுத்தி தந்த இலங்கை இராணுவம் மற்றும் பொலிசார் துணைபோகும் தமிழ் புலனாய்வாளர்கள் அத்தனை பேருக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகள். நீங்கள் மாணவர்களை தாக்கிய போது அவர்கள் மீது விழுந்த அடிகளும் உதைகளும் எமக்கு வலிக்கவில்லை. மாறாக வெஞ்சினத்தையும் விடுதலைப் பற்றையும் வேரோடி இன்னும் தளைக்க வைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணண் சரவணபவனை தாக்கியதும் கல்லெறிந்து அவர் வாகனக் கண்ணாடிகளை உடைத்ததும் எம்மை கவலை கொள்ளச் செய்யவில்லை. மாறாக எங்கள் பயணப்பாதையை தெளிவாகப் பார்க்கவும் புரியவும் வாய்ப்பை தந்திருக்கின்றது. ஊடகவியலாளர்கள் மீது நீங்கள் அரங்கேற்றிய அராஜகம் அவர்களை அச்சமடைய செய்யவில்லை. மாறாக அவர்களின் பேனாக்களுக்கும் விசைப் பலகைகளுக்கும் புதிய சத்தி பாய்ச்சி இருக்கின்றது. இத்தனை மாற்றங்களையும் எமக்காக தந்த உங்கள் மீதும் எமக்கு ஆத்திரம் வரவில்லை. மாறாக அனுதாபம் தான் வருகின்றது. எங்கள் வீடுதலை உணர்வுகள் தேய்ந்து வீணாராகின்றோம் என குற்றச்சாட்டுக்கள் எமது இளம் சமூகம் மீது சுமத்தப்பட்ட போது அந்த மாயையை தகர்த்தெறிந்து, நாம் இன்றும் சுயம் தொலையாது சுதந்திரக்காற்றை சுவாசிக்கவே துடிக்கின்றோம் என உலகச் செவிகளில் உறைக்கச் சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை தந்த உங்களுக்கு எமது நன்றிகள். உலகமே இன்னும் எமக்கான நீதியை வழங்க உனக்கு இன்னும் சாட்சிகளும் காட்சிகளும் தேவையா? தனித்துவமிக்க எங்கள் இனம் தொலைந்து போன எமது உறவுகளை நினைக்கக் கூட உரிமையில்லாத நாட்டில் ஒன்றாக வாழ்வது என்பது சாத்தியமா? நல்லிணக்கம் சமாதானம் என்பது பணிந்து போதலின் மூலமா பழக்கப்படுத்தப்பட வேண்டும்? இல்லை எங்கள் தனித்துவங்களை இழக்க நாம் தயாரக இல்லை. எங்கள் உயிர் கொடுத்தேனும் உரிமையயைப் பெறுவதில் உறுதியாகவுள்ளோம் என்பதை எமது பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக உனக்கு அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள். எங்களின் அடுத்த நகர்வின் வடிவத்தை நாங்கள் தீர்மானிக்க நீங்கள் துணையாக இருங்கள் என்ற வேண்டுகோளைத் தான் இன்று நாம் விடுக்கின்றோம். சாதகமான உனது பிரதிபலிப்புக்களுக்காக காத்துக்கிடக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :