யாழ்.குடாவில் சாரதிகளிடம் கொத்தும் சாராயமும் கேட்கும் போக்குவரத்து பொலிஸார்!

3.12.12


ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களிடம் கொத்து ரொட்டியும் சாராயமும் வாங்கித் தருமாறு யாழ். குடாவில் பொலிஸார் கேட்பதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பாலும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நடைபெற்று வருவதாக தெரியவருகின்றது. இரவு நேரத்தில் கடமை புரியும் போக்குவரத்து பொலிஸார் ஆவணங்கள் இன்றி வருபவர்களை தடுத்து வைத்து அவர்களிடம் ஒரு போத்தல் சாராயமும் அங்கு கடமையில் உள்ள அத்தனை பேருக்கும் கொத்துரொட்டியும் வாங்கித்தருமாறு கேட்டு வருகின்றனர். இதற்கு உடன்படும் சிலர் நீதிமன்றத் தொல்லைகளுக்கு ஆளாகாமல் வாங்கிக் கொடுத்துவிட்டுச் செல்வதாகவும் அறியமுடிகின்றது. அவ்வாறு வாங்கிக் கொடுக்க உடன்படுபவர்களிடம் தொலைபேசி இலக்கம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அண்மையில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை வீதியால் சென்று கொண்டிருந்த ஒருவரை இரவு 8.30 மணிக்கு இடைமறித்த பொலிஸார் அவரிடம் ஒருபோத்தல் சாரயமும் நான்கு கொத்து ரொட்டியும் வாங்கி அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கொடுக்குமாறு பணித்துள்ளதோடு அவரின் தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் வாங்கியுள்ளனர். பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்கிய குறித்த நபர் அரைப்போத்தல் சாரயமும் ஒரு கொத்துரொட்டியும் வாங்கி வைத்துவிட்டு போயுள்ளனர். குறித்த கடைக்கு வந்த பொலிஸார் சாரயத்தின் அளவையும், கொத்துரொட்டியின் எண்ணிக்கையும் பார்த்து கடுப்பாகி குறித்த நபருக்கு தொலைபேசியில் எடுத்து பேசியுள்ளதோடு குறித்த இரண்டு பொருட்களையும் வந்து எடுத்துக்கொண்டு போகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :