வன்னியில் மோசடி நபர்களிடம் பணத்தை பறிக்கொடுக்கும் மக்கள்

3.12.12


வன்னியின் பல்வேறு பகுதிகளிலும் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பணத்தை அபகரித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று கவலை தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களுக்குச் செல்லும் இனம் தெரியாதவர்கள் தம்மை காப்புறுதி நிறுவனங்களின் முகவர்கள் என்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்றும் கூறி பணத்தைச் சூறையாடி வருகின்றனர். அவர்கள் பல்வேறு வகையான படிவங்களை பொதுமக்களிடம் வழங்குவதுடன் கட்டுப்பணம் என்ற பெயரில் பெருந்தொகையை அபகரித்துச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் காப்புறுதி நிறுவனத்தின் பிரதிநிதி என்று கூறிய பெண்ணொருவர் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளார். அதேபோன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் பலரிடம் அரச அங்கீகாரம் பெற்ற காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகவர்கள் எனக் கூறப்பட்டோரால் காப்புறுதியின் மாதாந்தக் கட்டுப்பணம் கையாடல் செய்யப்பட்டதால் குறித்த வர்த்தகர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. போரால் அனைத்தையும் இழந்து அடிமட்ட நிலையில் வாழ்ந்து வரும் மக்களிடம் இத்தகைய மோசடிக் கும்பல்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றன. கட்டுப்பணத்துக்கு தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனம், மின்னியல் பொருள்கள் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறிய மோசடிக் கும்பல்கள் முல்லைத்தீவிலுள்ள பலரிடம் இலட்சக் கணக்கான பணத்தைச் சுருட்டிச் சென்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்த நிலையில் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வரும் இத்தகைய மோசடி நபர்கள் தொடர்பாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களை, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

0 கருத்துக்கள் :