ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வில்லை” -கமல்!

24.12.12

இந்திய நாட்டின் தலைநகர் டில்லியில் கடந்த 16-ஆம் தேதி இரவு, ஓடும் பஸ்ஸில் ஒரு மருத்துவ கல்லூரி மாணவியை ஆறுபேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு நிலையை உருவாக்கியுள்ளது. நாடு முழுவதும் குறிப்பாக டில்லியில் அதிகமாக நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து சமீபத்தில் இயக்குனர் அமீர் தனது கண்டனத்தை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். பாலியல் பலாத்கார சம்பவம் பற்றி பேசிய கமல் “ டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம் அவமானத்திற்குரிய செயல். ஆனால் இந்த தவறுக்கு தூக்கு தண்டனை தீர்வாகாது. ஒரு குற்றத்திற்கு மற்றொரு குற்றம் தீர்வு இல்லை. தூக்குதண்டனையை சட்டரீதியான கொலை என்றும் சொல்லலாம். தூக்கு தண்டனை வேண்டாம் என்று சொல்வதால் இந்த கொடூரமான குற்றத்தை நினைத்து நான் வருந்தவில்லை என அர்த்தம் கிடையாது. சம்பவம் நடந்தது என்னுடைய பேருந்து. நடந்த இடம் எனது தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண் என் சகோதரி. தவறைச் செய்தவர்கள் என் சகோதரர்கள். இதை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார். தலைநகர் டில்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தை எதிர்த்து பொதுமக்களும் வீதிகளில் இறங்கி போராடத்துவங்கிவிட்டதால் டில்லி முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த பள்ளி மாணவி புனிதாவின் பாலியல் பலாத்கார கொலையையும், டில்லி சம்பவத்தையும் கண்டித்து சென்னையிலும் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

0 கருத்துக்கள் :