கர்ப்பிணி எரித்து கொலை : கள்ளக்காதலன் கைது

4.12.12

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகள் முனியம்மாள் என்ற ஜோதி(30). இவரது கணவர் நாகராஜன். கோவையில் தங்கி கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். ஜோதி கேத்தம்பட்டியில் தனது தந்தை வீட்டில் தங்கி, அருகேயுள்ள சுள்ளெறும்பு கிராமத்தில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஜோதி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதே மில்லில் வேலை பார்த்து வந்தவர் மணிகண்டன். இவர் நடுப்பட்டி பகுதியை சேர்ந்தவர். இவருக்கும், ஜோதிக்கும் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்தது. நேற்று மாலை பழனிச்சாமி சுள்ளெறும்பு கிராமத்துக்கு சென்று விட்டார். இவரது மனைவி பாப்பாத்தியும் கடைக்கு சென்றிருந்தார். அப்போது மணிகண்டன் வீட்டுக்கு வந்து ஜோதியுடன் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், அங்கிருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை ஜோதி மீது ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் ஜோதி அலறினார். உடனே மணிகண்டன் தப்பியோடி விட்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் ஜோதி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், ஜோதிக்கும், மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது. இவர்களின் தொடர்பு உறவினர்களுக்கு தெரிய வர, ஜோதியை கண்டித்துள்ளனர். இதையடுத்து மணிகண்டனுடன் இருந்த தொடர்பை ஜோதி தவிர்த்து வந்தார். இதில் ஏற்பட்ட தகராறில் ஜோதி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :