புலம் பெயர் தமிழர்களோடு இணைக்கபடும் முன்னாள் போராளிகளின் கைது !

10.12.12


யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களின் பின்னணியில் புலம்பெயர் புலிகள் இருப்பதாக சாயம் அடிக்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக வல்வெட்டித்துறையில் கடத்தப்பட்ட நிலையில் பின்னர் கைது செய்யப்பட்டதாக பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடசாலை மாணவன் கூட அவ்வாறே செயற்பட்டதாக தகவல்களை கசிய விட அரசு முற்பட்டுள்ளது. குறிப்பாக இத்தாலியிலிருந்து சில நபர்கள் அனுப்பிய 25ஆயிரம் ரூபாவிற்காகவே கொடியேற்றியதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது. அத்துடன் கொழும்பு சென்றிருந்த நிலையில் கடத்தப்பட்ட மற்றொரு முன்னாள் போராளியும் அதே சாயமடிக்கப்பட்டு இக்குற்றச்சாட்டு வளையத்தினுள் கொண்டுவரப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வரும் முன்னாள் போராளிகள் கூட கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிக்க வைக்கப்பட்டு வருபவர்களாகவே இருப்பதாக தொடர்புடைய தரப்புகள் கூறுகின்றன. பெண் போராளியொருவரது தலைமையில் இவர்கள் கூட மாவீரர் தின அனுஸ்டிப்பில் ஈடுபட்டிருந்தவர்களென சாயமடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இவர்களுள் கணிசமானோர் மாதாந்த மற்றும் வாராந்த விசாரணைகளுக்குள் வராதவர்களெனவும் அதனால் சீற்றங்கொண்டு புலனாய்வாளர்களால் இவ்வாறு சிக்க வைக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. பளைப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள சிற்றுண்டிச்சாலை வர்த்தகர் புலிகளது அமைப்பில் சமையலாளராக மட்டும் இருந்தவரென கூறும் தரப்புகள் இத்தகைய கைதுகளால் பல முன்னாள் போராளிகள் நாட்டை விட்டு வெளியேறவோ அல்லது தலைமறைவு வாழ்க்கையினை வாழவோ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக் மேலும் கூறுகின்றன. இந்நிலையில் நேற்றும் இன்றுமாக மட்டும் யாழ்ப்பாணத்தில் 17 முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அச்சுவேலி பொலிஸ் பிரிவை சேர்ந்த 15 பேரும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்நத இருவரும் அடங்கியுள்ளனர். எனினும் இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளரென்ற தகவல்கள் இதுவரை வெளியாகியிருக்கவில்லை. இதனிடையே பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களை இராணுவ புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைத்ததாக கடும் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கும் மருத்துவ பீடாதிபதி பாலகுமாரன் மற்றும் பீடாதிபதி வேல்நம்பி ஆகியோர் வவுனியாவிற்கு விஜயம் செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை பார்வையிட்டு திரும்பியுள்ளனர்.

0 கருத்துக்கள் :