மல்லாகம் நீதிமன்றம் 8 வர்த்தகர்களுக்கு 17,000 ரூபா தண்டம்

9.12.12


சட்டவிரோதமாக கள் விற்பனை மற்றும் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த வர்த்தகர்கள் 8 பேருக்கு மல்லாகம் நீதிமன்றில் 17 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. சங்கானை மதுவரித் திணைக்களத்தினரால் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையின் போது 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 5 பேரும் சட்ட விரோதமாக வீடுகளில் வைத்துகள் விற்பனை செய்த 3 பேரும் இனங்காணப்பட்டனர். இந்த 8 பேருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் கடந்த 4 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்ப்படிருந்தது. இந்த இரு வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது 21 வயதுக் குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 5 பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபா வீதம் 10 ஆயிரம் ரூபா அபராதமும், சட்ட விரோதமாக வீடுகளில் வைத்துகள் விற்பனை செய்த மூவரில் இரு வருக்கு தலா இரண்டாயிரம் ரூபாவும் ஒருவருக்கு மூவாயிரம் ரூபாவும் அபராதம் விதிக்கப்பட்டது. சங்கானை மதுவரித் திணைக்களத்துக்கு உட்பட்ட சித்தங்கேணி, மூளாய், தொல்புரம், பண்டத்தரிப்பு ஆகிய இடங்களில் இவர்கள் இனங்காணப்பட்டதாக சங்கானை மது வரித் திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி தர்மலிங்கம் நந்த குமார் தெரிவித்தார். இதேவேளை சட்ட விரோதமாக அரச சாராயத்தை காரைநகர் மருதபுரம் பகுதியில் விற்பனை செய்த ஒருவருக்கு கடந்த 5 ஆம் திகதி 10 ஆயிரம் ரூபா அபராதம் ஊர்காவற்துறை நீதி மன்றால் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :