4 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்! காரைநகர், ஏழாலை, இருபாலையைச் சேர்ந்த 5 பேர் கைது

16.12.12

யாழ். மாவட்டத்தில் கடந்தவாரம் மட்டும் நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர். இவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம்.ஜிப்றி தெரிவித்தார்.

அவரது அலுவலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

வவுனியா இளைஞர் கைதானார்

யாழ். பஸ் நிலையத்தில் நின்றிருந்த பதின்ம வயதுச் சிறுமியை ஒருவர் பஸ்ஸில் ஏற்றிச் சுன்னாகம் அழைத்துச் சென்று கடந்த 7 ஆம் திகதி அங்கு வைத்துப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

வவுனியா தரணிக்குளத்தைச் சேர்ந்த ஒருவரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காரைநகரைச் சேர்ந்த 21, 61 வயதுகளை உடைய இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்ரோபர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் சிறுமி அதுபற்றி வெளியே எவருக்கும் கூறவில்லை. கடந்தவாரம் கொடிகாமம் செல்வதற்காகப் புறப்பட்ட இந்தச் சிறுமி வழி தெரியாமல் மானிப்பாயில் இறங்கிவிட்டார்.

அங்கு சந்தேகத்துக்கிடமான முறையில் நின்ற அவரை மானிப்பாய் பொலிஸார் சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்கொண்ட விசாரணையின் மூலமாகவே சிறுமி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தெரியவந்தது. அதனடிப்படையிலேயே இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயதுச் சிறுமி யைக் காதலித்துத் திருமணம் செய்வதாகக்கூறி, அவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலை, மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருபாலையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். என்றார்.

0 கருத்துக்கள் :