சிறிலங்காவின் அரச பயங்கரவாதம் பரிதியின் படுகொலையில் பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகம்!

13.11.12


படுகொலைக்கு உள்ளாகியிருந்த பிரான்ஸ்-தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி அவர்களது படுகொலைச் சம்பவத்தின் பின்னணியில், பிரான்சுக்கான சிறிலங்காவின் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் செயற்பட்டுள்ளமை அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பில் புலனாய்வுப்பகுதியில் செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள பிரான்சின் பிரபல பத்திரிகையா leparisien, பிரான்சுக்கான சிறிலங்காத் தூதரகத்துக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து கொலையாளிகளுக்கு 50 000 யூரோ பணம் வழங்கப்பட்டுள்ளதோடு, சிறிலங்காவுக்கான கடவுச்சீட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரென்சு குற்றத்தடுப்பு காவல்துறை மற்றும் நீதி விசாரணப்பிரிவினை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அம்பலத்துக்கு வந்துள்ள சிறிலங்காவின் எல்லைதாண்டிய அரச பயங்கரவாதம், சிறிலங்கா அரசாங்கத்துக்கு - பிரென்சு அரசுக்கு இடையில் கடுமையான இராஜதந்திர நெருக்கடியினைத் தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படுகொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் சட்டத்துக்கு புறம்பான முறையில் பிரான்சுக்குள் உள்நுழைந்துள்ளதோடு, சட்டத்துக்கு புறம்பான முறையிலேயே பிரான்சில் தங்கியிருந்துள்ளனர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலாம் நபர் பரிசின் புறநகரான Villeneuve-Saint-Georges பகுதியிலும் இரண்டாம் நபர் பரிசின் Barbès18ம் வட்டாரத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், முன்னுக்குபின் முரணான தகவல்களை கைது செய்யப்பட்டுள்ள நபர் விசாரணையின் போது தெரிவித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த படுகொலைச் சம்பவத்தினை மையப்படுத்தி பல்வேறு தரப்புக்களிடமும் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குழு மோதல் பிரச்சினைகளுக்குள் குறித்த படுகொலைச் சம்பவத்தினை பிரென்சு காவல்துறையினர் உள்ளடக்கி விடாதிருக்கும் பொருட்டு, சட்ட வல்லுனர்களை அமர்த்துவதன் மூலம் முறையான சட்ட நடவடிக்கைகளின் வழியே, குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதனை உறுதி செய்யும் விதத்தில் இதற்கான தொடர் நடவடிக்கைகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :