ஜெனிவா-சிறிலங்கா. ஐ.நா கூட்டத் தொடரில் அனைத்துலக மன்னிப்புச் சபை அறிக்கை

5.11.12


சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ச்சியாக தனது நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருவதை ஐ.நா பூகோள கால மீளாய்வானது சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தற்போது இடம்பெறும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றன தொடர்பில் சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் ஐ.நா பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை அனைத்துலக சமூகமானது தொடர்ந்தும் ஏற்றுக் கொள்ளமாட்டாது எனவும், நவம்பர் 01 அன்று ஆரம்பமான ஐ.நா பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்ச்சியாக தன் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை ஏற்க மறுப்பதாகவும், சிறிலங்காத் தீவில் இடம்பெற்ற யுத்த கால மீறல்கள் மற்றும் அதற்குப் பின்னான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது தனது உறுப்பு நாடுகளில் நிலவும் மனித உரிமை நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு நான்கரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆராயும். இந்த வகையில் 2008ம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா பூகோள கால மீளாய்வுக் கூட்டத் தொடரில் சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக ஆராயப்பட்டது. அக்காலப்பகுதியில், சிறிலங்கா அரசாங்கமானது தமிழ்ப் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. "சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் தொடர்பாக பல பத்தாண்டுகளாக வெறும் உறுதிமொழிகளை மட்டுமே வழங்கி வந்துள்ளது. இதனை பூகோள கால மீளாய்வின் போது சிறிலங்காவானது தனது நாட்டில் மனித உரிமை மீறல்களை நிறுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என பல்வேறு நாடுகள் சுட்டிக்காட்டியதன் மூலம் தெளிவாக அறியமுடிகிறது" என சிறிலங்கா தொடர்பான அனைத்துலக மன்னிப்புச்சபையின் வல்லுனர் ஜோலண்ட் பொஸ்ரர் சுட்டிக்காட்டியுள்ளார். "சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போர் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட அந்நாட்டு அரசாங்கமானது தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகளை மேற்கொண்டு வருவதுடன், காணாமற் போதல்கள் மற்றும் படுகொலைகள் போன்றவற்றை நிறுத்துவதற்கான எந்தவொரு நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை" எனவும் ஜோலண்ட் பொஸ்ரர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் அச்சுறுத்தல்களைக் களைந்து பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் அனைத்துலக மன்னிப்புச்சபையிடம் தெரிவித்துள்ளனர். மார்ச் 2012ல் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவானது தனது நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துலகப் போர் மீறல்கள் தொடர்பில் பொறுப்பளிப்பதுடன், இது தொடர்பாக சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன் நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல்களை வெளியிடும் ஊடகவியலாளர்களை சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் 'தேசத்துரோகிகள்' என முத்திரை குத்தின. இதுமட்டுமல்லாது, சிறிலங்கா மக்கள் உறவு விவகார அமைச்சரால் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் சட்டவாளர்கள் நீதித் துறை உறுப்பினர்கள் போன்றவர்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஒக்ரோபர் 07, 2012 அன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்ற பிரதம நீதிபதியான மஞ்சுளா திலகரட்ண மீது ஆயுததாரிகள் தாக்குதலை மேற்கொண்டனர். சிறிலங்கா அரசாங்கமானது நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே மஞ்சுளா திலகரட்ண மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதும், எந்தவொரு விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இவ்வாறான சந்தேக நபர்கள் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின் மூலம் விசாரணைகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இதற்கு முன்னர் இடம்பெற்ற சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வின் போது வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், சிறிலங்காவில் கைதுகளும், தடுத்து வைத்தல்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கான இளையோர்கள் இன்றும் சிறிலங்காவின் தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். "சிறிலங்காவில் நிலவும் மனித உரிமை நிலைப்பாடு தொடர்பான பூகோள கால மீளாய்வு இடம்பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கூட தற்போதும் அந்நாட்டில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. அத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்துள்ளது" என பொஸ்ரர் சுட்டிக்காட்டியுள்ளார். மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 26 யூலை 2012 அன்று தனது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை விவகாரம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஒன்றை முன்வைத்தது. எதுஎவ்வாறிருப்பினும், இத்திட்டம் முழுமை பெற்றிருக்கவில்லை. குறிப்பாக, பொதுமக்கள் கொல்லப்பட்டமை, விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, கடத்தல்கள் மற்றும் காணாமற் போதல்கள் போன்ற விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் உள்ளடக்கியிருக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை அடையாளங் கண்டு அவர்களுக்கு எவ்வித தண்டனைகளையும் வழங்கவில்லை. ஜனவரி 2006ல் கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் 2006ல் பணியில் ஈடுபட்டிருந்த 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை போன்ற குறிப்பிட்ட சில சம்பவங்கள் தொடர்பாகக் கூட சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. இவை மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2007ல் நியமிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் விசாரணை ஆணைக்குழுவில் இவ்விரு வழக்குகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் இவை தொடர்பான எந்தவொரு தீர்வுகளும் வெளியிடப்படவில்லை. "இவ்வாறான மிக மோசமான வழக்குகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் சிறிதளவேனும் அக்கறை காட்டாதது அனைத்துலக சமூகத்தை அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. அத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கமானது மனித உரிமை விடயம் தொடர்பில் மீண்டும் மீண்டும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கிவருகிறது. இது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது. நடைமுறை சார் நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கம் எடுக்கும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் நம்பமாட்டாது. குறிப்பாக 2007ல் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவானது தனது விசாரணைகள் தொடர்பான தீர்வை வெளியிட வேண்டும்" எனவும் பொஸ்ரர் தெரிவித்துள்ளார். "இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் விசாரிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு காலம் தேவைப்படுகிறது?" எனவும் பொஸ்ரர் கேள்வியெழுப்பியுள்ளார். நவம்பர் 05, 2012 அன்று சிறிலங்காவில் நிலவும் மனித உரிமை மீறல் நிலைப்பாடு தொடர்பாக ஐ.நா பூகோள கால மீளாய்வின் முழுமையான அறிக்கையானது வெளியிடப்படவுள்ளது. இன்றைய கூட்டத்தின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறும் தனது கூட்டத் தொடரில் சில தீர்வுகளை எட்டும். சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் மீண்டும் முன்வைக்கும் வாக்குறுதிகளை நிறுத்தி பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பாக தற்போது இடம்பெறும் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தை அனைத்துலக சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழிமூலம் : Amnesty International மொழியாக்கம் : நித்திபாரதி

1 கருத்துக்கள் :

Sakthi Dasan சொன்னது…

நண்பரே,

தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com

- தமிழ் களஞ்சியம்